பழைமைவாய்ந்த நடுநிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படுமா

ஊத்துக்கோட்டையை அடுத்த நம்பாக்கத்தில் உள்ள பழைமைவாய்ந்த நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊத்துக்கோட்டையை அடுத்த பூண்டி ஒன்றியத்தில் உள்ளது நம்பாக்கம் கிராமம். இங்கு சுமார் 3,000 மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் பெரும்பாலோர் விவசாய, கூலி தொழிலாளர்களாக உள்ளனர். ஆதிதிராவிடர்கள், பழங்குடியின மக்களும் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்தில் 1923-ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் நம்பாக்கத்தைச் சுற்றியுள்ள வெங்கம்மாபுரம் கண்டிகை, நயப்பாக்கம், கட்டானூர், நம்பாக்கம் காலனி, கற்கஞ்சி நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு 8-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.
9-ஆம் வகுப்பு படிப்பை தொடர வேண்டுமானால் இங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள பூண்டி அல்லது 18 கி.மீ. தொலைவில் உள்ள திருவள்ளூருக்கு செல்லவேண்டும். காலை, மாலை வேளைகளில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல ஏதுவாக பேருந்து வசதி இல்லை.
பென்னாலூர்பேட்டையில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் அரசு பேருந்து நம்பாக்கம் கிராமத்துக்கு காலை 7 மணிக்கு வரும். அதில் சென்றால் பூண்டி பள்ளிக்கு 7.15 மணிக்கு சென்றுவிடுவார்கள்.
முன்கூட்டியே பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகள் வெளியில் காத்திருக்கும் நிலை உள்ளது.
இந்த வழியில் அடர்ந்த காடுகள், ரங்காபுரம் ஓடை, வயல்வெளிகள் ஆகியவற்றை கடந்து செல்லவேண்டும் என்பதால் அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டியில் செல்லவும் மாணவிகள் தயங்குகின்றனர்.
பாதுகாப்பு இல்லாத இவ்வழியில் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகிறார்கள். இதனால், பெண் பிள்ளைகளின் படிப்பை 8-ஆம் வகுப்போடு நிறுத்தி விடுகின்றனர்.
இதுகுறித்து நம்பாக்கம் முன்னாள் ஊராட்சித் தலைவர் வெங்கடேசன், வார்டு உறுப்பினர் எஸ். மாரி, அதிமுக ஊராட்சி செயலாளர் ஆர்.சேகர் ஆகியோர் கூறியதாவது:
எங்கள் ஊராட்சியில் அரசு வழங்கிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்றுள்ளோம். ஆனால், இங்குள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அரசிடம் வைப்புத் தொகையாக ஒரு லட்ச ரூபாய் எங்களது பங்களிப்பாக வழங்கியுள்ளோம்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, எம்.பி. கே.வேணுகோபால், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், மாவட்ட ஆட்சியர், கல்வித் துறை அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் கொடுத்துள்ளோம்.
இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நம்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் உள்ள மாணவிகள் உயர்கல்வி பயிலும் வகையில் நடுநிலைப்பள்ளியை உயர்
நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com