முஸ்லீம் லீக் தலைவர் இ. அகமது மறைவு: மு.க. ஸ்டாலின், ராமதாஸ் இரங்கல்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அகமது மறைவிற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர்  இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அகமது மறைவிற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர்  இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இ.அகமதுவின் திடீர் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர்ந்த 1967 ஆம் வருடம் முதன் முதலில் கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அகமது கேரள மாநிலத்தின் தொழில்துறை அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினராக, மத்திய இணை அமைச்சராக தன் மாநிலத்திற்காகவும், நாட்டுக்காகவும் அரும்பணியாற்றியவர். தலைவர் கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பராக இருந்த அவர் சென்னை வரும் போதெல்லாம் தலைவரை வந்து சந்திக்க மறக்காதவர். மதசார்பற்ற கொள்கைக்காகவும், நாட்டின் ஒற்றுமைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருந்த அகமது இன்று நம்மிடம் இல்லை என்பதை மனது அறவே ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. தலைவர் கருணாநிதி சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் அகமதுவின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்திற்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும், கேரள மாநிலம் மலப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான இ.அகமது உடல் நலக் குறைவால் தில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில்  உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
தில்லியில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த போது, மாரடைப்பால் மயங்கி விழுந்த அவர், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். எனினும், மருத்துவம் பயனின்றி இன்று காலை அவர் உயிரிழந்திருக்கிறார். கேரள சட்டப்பேரவை உறுப்பினராக 5 முறையும்,  கேரள அமைச்சராக 5 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார். 1991 முதல் தொடர்ந்து 7 முறை நாடாளுமன்ற மக்களவைக்கு கேரளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். முந்தைய ஆட்சியில் வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருந்த போது, வளைகுடா நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த அரும்பாடுபட்டார். அவரது மறைவு இந்திய தேசிய யூனியன் லீக் கட்சிக்கும், கேரள அரசியலுக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com