ராணுவத்தினருக்கான பிரத்யேக பருத்தி ஆடை: காந்தி கிராமப் பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு

ராணுவத்தினர் மற்றும் மருத்துவத் துறையினரின் உபயோகத்திற்கான பிரத்யேகப் பருத்தி ஆடையை காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவி இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.
ராணுவத்தினருக்கான பிரத்யேக பருத்தி ஆடையை உருவாக்கிய காந்தி கிராம பல்கலைக்கழகப் பேராசிரியர் எம்.ஜி.சேதுராமன் மற்றும் ஆராய்ச்சி மாணவி தி.சூர்யபிரபா.
ராணுவத்தினருக்கான பிரத்யேக பருத்தி ஆடையை உருவாக்கிய காந்தி கிராம பல்கலைக்கழகப் பேராசிரியர் எம்.ஜி.சேதுராமன் மற்றும் ஆராய்ச்சி மாணவி தி.சூர்யபிரபா.

ராணுவத்தினர் மற்றும் மருத்துவத் துறையினரின் உபயோகத்திற்கான பிரத்யேகப் பருத்தி ஆடையை காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவி இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

பருத்தி ஆடைகளுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், நோய்த்தொற்று தடுப்பின்மை, விரைவாக நீர் உறிஞ்சும் தன்மை உள்ளிட்ட சில குறைபாடுகள் காரணமாக, ராணுவ வீரர்களும், மருத்துவத் துறையினரும் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.
இதற்குத் தீர்வு காணும் வகையில், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் எம்.ஜி. சேதுராமன், ஆராய்ச்சி மாணவி தி.சூர்யபிரபா ஆகியோர் புதிய திறனூடப்பட்ட பருத்தி துணி ரகத்தினை தயார் செய்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பு செல்லுலோஸ் என்ற சர்வதேச அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலை. நிர்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேராசிரியர் சேதுராமன் கூறியதாவது:
தாமிர அசிடேட் என்ற வேதிப் பொருளில் பருத்தி ஆடைகளை நனைத்து அஸ்கார்பிக் அமிலம் மூலமாக பருத்தியின் புறப்பரப்பில் தாமிரத்தைப் படியவைத்து அதன் மீது ஸ்டியரிக் அமிலம் பூசப்படுகிறது. இதனால், அதிக நீர் விலக்கும் தன்மை, பாக்டீரியாக்களை கொல்லும் தன்மை, ரத்தக் கறை படியாத தன்மை மற்றும் நீர், எண்ணெய் போன்ற கலவையினை பிரிக்கும் தன்மையுடன் மாற்றியமைக்கப்பட்ட பருத்தி துணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வகை பருத்தி துணி இனிவரும் காலங்களில் ராணுவ வீரர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்குப் பெரிதும் பயன்படும் விதமாக அமையும். மேலும், இந்த வகை துணி ரகங்களை கூடுதல் செலவு இல்லாமலும், பருத்தியின் பண்புகள் பாதிக்கப்படாமலும் தயாரிக்க முடியும் என்றார்.
எதிர்கால இளைஞர்களின் உடையை அலங்கரிக்கும் எலக்ட்ரானிக் துணி ரக ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்திடம் (டிஆர்டிஓ) நிதியுதவி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com