உதய் மின் திட்டத்துக்காக ரூ.22,815 கோடி

தமிழகத்தில் உதய் திட்டத்தைச் செயல்படுத்துவது போன்ற பெருந்திட்டங்களுக்காக ரூ.28,942.69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
உதய் மின் திட்டத்துக்காக ரூ.22,815 கோடி

தமிழகத்தில் உதய் திட்டத்தைச் செயல்படுத்துவது போன்ற பெருந்திட்டங்களுக்காக ரூ.28,942.69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிகழ் நிதியாண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகளை சட்டப் பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
இந்த துணை மதிப்பீடுகள் ரூ.28,942.69 கோடி நிதியை ஒதுக்க வழி வகை செய்கிறது. இதை தாக்கல் செய்து அவர் பேசியது:-
நிகழ் நிதியாண்டுக்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் 2016 ஜூலை 21-இல் தாக்கல் செய்யப்பட்டது. இதன்பிறகு, புதுப் பணிகள், துணைப் பணிகளுக்கான பிரிவுகளுக்கு சட்டப் பேரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். மேலும், எதிர்பாராத செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையை அந்த நிதிக்கு ஈடுசெய்வதும் துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும்.
உதய் மின் திட்டம்: உதய் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் உற்பத்தி-பகிர்மானக் கழகத்தின் கடனை அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டு, நிதியுதவியாக ரூ.22,815 கோடி அளிக்கப்படும்.
மின் உற்பத்தி-பகிர்மானக் கழகம் செலுத்த வேண்டிய ரூ.4,523.19 கோடி அளவிலான கடன்கள், முன்பணங்கள், வழிவகை முன்பணங்கள், அவற்றின் மீதான வட்டி, அபராத வட்டி ஆகியவற்றை பங்கு மூலதன உதவியாக மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக மூலதனக் கணக்கில் ரூ.4,123.19 கோடி கூடுதல் நிதியொதுக்கம் தேவைப்படுகிறது. ஆனாலும், இந்தத் துணை மதிப்பீடுகளில் ரூ.3,958.19 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை மானியத்தில் ஏற்படும் மீதத்தில் இருந்து மறுநிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.
புயல் பாதிப்புகள்: வர்தா புயலால் சேதமடைந்த மின் விநியோகக் கட்டமைப்பு வசதிகளை சரிசெய்வதற்காக, தமிழ்நாடு மின் உற்பத்தி-பகிர்மானக் கழகத்துக்கு வழிவகை முன்பணமாக ரூ.400 கோடியை அரசு அனுமதித்துள்ளது.
மேலும், மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் மானியம் வழங்குவதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட ரூ.200 கோடிக்கும் கூடுதலாக இதுவரை ரூ.261.69 கோடியை அரசு அனுமதித்துள்ளது.
புயல் நிவாரண-தாற்காலிக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.585.45 கோடியும், வறட்சியைச் சமாளிக்கவும் ரூ.105 கோடியும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவை இந்தத் துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
பயிர்க் கடன்...: கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் இருந்த பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யும் திட்டத்தின்கீழ், மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு வழிவகை முன்பணமாக ரூ.171.69 கோடியை அரசு அனுமதித்துள்ளது.
சம்பா காலத்தில் பயிர் செய்வதை ஊக்குவிக்க உதவித் தொகை வழங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கென ரூ.46.31 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இந்தத் துணை மதிப்பீடுகளில் அடையாள நிதி ஒதுக்கமாக ஒவ்வொரு பிரிவின் கீழும் ஆயிரம் ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள தொகை மானியத்தில ஏற்படும் மீதத்தில் இருந்து மறுநிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.
கரும்பு அரவைக் காலத்துக்கான நியாயமான-ஆதாய விலை நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.92.40 கோடியை அரசு அனுமதித்துள்ளது. துணை மதிப்பீடுகளில் அடையாள நிதி ஒதுக்கமாக ஆயிரம் ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடம் மாற்றம் செய்து திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிய அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்குவது போன்றவற்றுக்காகவும் அடையாள நிதி ஒதுக்கமாக ஆயிரம் ரூபாயானது துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.
இந்த முதல் துணை மதிப்பீடுகள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com