தமிழகத்தில் ரூ.2,170 கோடி செலவில் சூரிய ஒளி மின் நிலையங்கள்

என்எல்சி இந்தியா நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.2,170 கோடி செலவில் 500 மெ.வா. திறன்கொண்ட சூரிய ஒளி மின் நிலையங்களை அமைக்க உள்ளது.
நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 10 மெ.வா. திறன்கொண்ட சூரிய ஒளி மின் நிலையம்.
நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 10 மெ.வா. திறன்கொண்ட சூரிய ஒளி மின் நிலையம்.

என்எல்சி இந்தியா நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.2,170 கோடி செலவில் 500 மெ.வா. திறன்கொண்ட சூரிய ஒளி மின் நிலையங்களை அமைக்க உள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நெய்வேலியில் அமைக்கப்பட்ட 10 மெ.வா. சூரிய ஒளி மின் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சூரிய ஒளி மின் நிலையங்களை அமைக்க என்எல்சி திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு 2022-ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் மெகா வாட் (ஒரு மணிக்கு 10 கோடி யூனிட்) மின் உற்பத்திக்கு சூரிய ஒளி மின்சக்தி நிலையங்கள் அமைக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு, தேசிய சூரிய மின்சக்தி திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்த இலக்கில், என்எல்சி இந்தியா நிறுவனம் தனது பங்களிப்பாக சுமார் 4,000 மெ.வா. சூரிய ஒளி மின் நிலையங்களை அமைக்க திட்டமிட்டு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
நெய்வேலியில் ரூ.75 கோடி செலவில் அமைக்கப்பட்ட 10 மெ.வா. திறன்கொண்ட சூரிய ஒளி மின் நிலையம் சிறப்பாக இயங்கி வருகிறது. தற்போது, நெய்வேலி நகரியத்தின் வடக்குப் பகுதியில் 675 ஏக்கர் பரப்பில் ரூ.700 கோடி செலவில் 130 மெ.வா. திறன்கொண்ட சூரிய ஒளி மின் நிலையத்தை அமைத்து வருகிறது.
தெற்கு அந்தமானில் 20 மெ.வா., வடக்கு அந்தமானில் 30 மெ.வா. உற்பத்தித் திறன் கொண்ட மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
அடுத்தகட்டமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்சம் 50 மெ.வா. திறன்கொண்ட மொத்தம் 500 மெ.வா. அளவிலான சூரிய மின் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன.
ரூ.2,170 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த மின் நிலையங்களிலிருந்து பெறப்படும் மின் சக்தி அனைத்தும் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு வழங்கப்படும். இதற்கான ஒப்பந்தம் ஏற்கெனவே கையெழுத்தாகியுள்ளது.
நெய்வேலியில் தற்போது 1,000 மெ.வா. திறன்கொண்ட அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டு வருவதுடன், 2,640 மெ.வா. திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒடிஸா மாநிலத்தில் 250 மெ.வா. சூரிய மின் நிலையம் அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இங்குள்ள தலபிரா பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதைப் பயன்படுத்தி அதனருகே 4,000 மெ.வா. அனல்மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் தலா 1,000 மெ.வா. சூரிய மின் நிலையம் அமைக்க ஒப்பந்தப் புள்ளிகளை வரவேற்பது மற்றும் மின்சக்தி வழங்கும் ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
என்எல்சி நிறுவனம் திருநெல்வேலி மாவட்டத்தில் தலா 1.50 மெ.வா. திறன்கொண்ட மொத்தம் 34 காற்றாலைகளை அமைத்து வருகிறது. இதில் 29 காற்றாலைகளில் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேலும், 200 மெ.வா. திறன்கொண்ட காற்றாலைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
என்எல்சி விரிவாக்கத் திட்டங்களின் மூலம், 2025-ஆம் ஆண்டுக்குள் அனல் மின் சக்தி மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறை மூலம் மொத்தம் 20,971 மெ.வா. (ஒரு மணி நேரத்தில் 2 கோடியே 9 லட்சத்து 70 ஆயிரம் யூனிட்) திறன் கொண்ட மின் திட்டங்களை நாட்டின் பல மாநிலங்களில் அமைக்க உள்ளது.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அனல் மின் நிலையங்கள் அனைத்தும் எரிபொருள் சுயசார்பு பெற்றவை. மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்காக ஆண்டுக்கு 6.22 கோடி டன் பழுப்பு நிலக்கரி மற்றும் 3.10 கோடி டன் நிலக்கரி என்ற அளவில் சுரங்க உற்பத்தித் திறனை அதிகரிக்கவுள்ளது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com