தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் பட்டம் ஏற்பு விழா

நாகை மாவட்டம், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் இளைய சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிக்கு புதன்கிழமை பட்டம் சூட்டினார் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம்.
தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானமாக பட்டம் சூட்டப்பட்ட  ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளுக்கு பாரம்பரிய  முறைப்படி பொன்னாடை அணிவித்து ஆசி வழங்குகிறார் ஆதீன குருமகா  சந்நிதானம் சண்முக தேசிக ஞா
தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானமாக பட்டம் சூட்டப்பட்ட ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளுக்கு பாரம்பரிய முறைப்படி பொன்னாடை அணிவித்து ஆசி வழங்குகிறார் ஆதீன குருமகா சந்நிதானம் சண்முக தேசிக ஞா

நாகை மாவட்டம், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் இளைய சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிக்கு புதன்கிழமை பட்டம் சூட்டினார் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம்.
தொன்மையான சைவத் திருமடங்களுள் ஒன்றாக விளங்கும், தருமபுரம் ஆதீனத்தின் தற்போதைய (26-ஆவது) குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தனக்குப் பின்னர் தருமையாதீன நிர்வாக பொறுப்பை ஏற்கும் வகையில், தருமையாதீன கட்டளைத் தம்பிரான் ஸ்ரீமத் மெளனகுமாரசாமித் தம்பிரான் சுவாமியை, தருமபுரம் ஆதீனத்தின் இளைய சந்நிதானமாக (சின்ன பண்டார சந்நிதியாக) நியமிப்பதாக அண்மையில் அறிவித்தார்.
இளைய சந்நிதானம் அறிவிப்பைத் தொடர்ந்து, ஸ்ரீமத் மெளனகுமாரசாமித் தம்பிரானுக்கு ஞானாசிரிய அபிஷேகம் செய்வித்து, இளைய ஆதீனமாக பட்டம் சூட்டும் விழா தருமையாதீன ஸ்ரீ சொக்கநாதர் பூஜை மடாலயத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீ சொக்கநாதப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, கடஸ்தாபனம் செய்யப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
கடஸ்தாபன பூஜையின் நிறைவில், மங்களவாத்திய முழக்கங்களுடன், வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீசொக்கநாதப் பெருமான் சன்னிதியில், ஸ்ரீமத் மெளனகுமாரசாமித் தம்பிரானுக்கு ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் எனத் திருப்பெயர் சூட்டி, ஞானாசாரிய அபிஷேகம் செய்வித்து, ஆதீன இளைய சந்நிதானமாகப் பட்டம் சூட்டினார் ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
இதைத் தொடர்ந்து, ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தர் சன்னிதியில் குருமகா சந்நிதானம் சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டார். பின்னர், அவர் மடாலயத்தில் கொலு வீற்றிருந்து ஆசி வழங்கினார். அப்போது, இளைய சந்நிதானம் பட்டம் ஏற்ற ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், குருமகா சந்நிதானத்துக்கு பாரம்பரிய முறைப்படி பூஜைகளை மேற்கொண்டு ஆசிப் பெற்றார்.
பின்னர், தருமையாதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் மடாலயத்தில் கொலுவீற்றிருந்து காட்சியளித்தார். அவருக்கு, திருப்பனந்தாள் ஆதீன இளவரசு திருஞானசம்பந்த தம்பிரான் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, ஆதீன கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் இளைய சந்நிதானத்திடம் ஆசிப் பெற்றனர்.
தொடர்ந்து, குருமூர்த்தம் மற்றும் தர்மபுரீசுவரர் கோயிலில் ஆதீன குருமகா சந்நிதானமும், இளைய சந்நிதானமும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு, தருமையாதீன திருநெறிய தெய்வத்தமிழ் மன்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்.
பல்வேறு ஆதீன திருமடங்களிலிருந்து அளிக்கப்பட்ட மரியாதைகளையும், தருமையாதீன நிர்வாகத்துக்குள்பட்ட 27 கோயில்களிலிருந்தும், பிற கோயில்களிலிருந்தும் கொண்டு வரப்பட்டிருந்த கோயில் பிரசாதங்களையும் குருமகா சந்நிதானமும், இளைய சந்நிதானமும் ஏற்றனர். இதைத் தொடர்ந்து, இருவரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்.
மலேசியா உள்பட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் திரளான எண்ணிக்கையில் பங்கேற்று ஆசிப் பெற்றனர்.
வேளாக்குறிச்சி ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், தவத்திரு ஊரன் அடிகள், துழாவூர் ஆதீனம், சிதம்பரம் மெளனமடம் சுவாமிகள், திருவாவடுதுறை, திருப்பனந்தாள், சூரியனார்கோயில் ஆதீனங்களின் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், விமலா வேல்முருகன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்புச் செயலர் நாகராஜன், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் வேதாந்தம், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க. அன்பழகன், இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையர் கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com