கிணற்றில் விழுந்த பெண் யானை உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த பெண் யானையை, 8 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு வனத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
அனைத்துத் துறையினர் மேற்கொண்ட மீட்புப் பணிகளை தொடர்ந்து,  கிணற்றிலிருந்து மேலே ஏற முயற்சிக்கும் யானை.
அனைத்துத் துறையினர் மேற்கொண்ட மீட்புப் பணிகளை தொடர்ந்து, கிணற்றிலிருந்து மேலே ஏற முயற்சிக்கும் யானை.

கிணற்றில் விழுந்த பெண் யானையை, 8 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு வனத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ராயக்கோட்டை அருகே உள்ளது, ஊடேதுர்க்கம் காப்புக் காடு. சில நாள்களுக்கு முன்னர் தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் இருந்து ஒசூர் சானமாவு காட்டுக்கு வந்த 40 யானைகளை வனத்துறையினர் ஊடேதுர்க்கம் காட்டுக்கு விரட்டினர்.
இந்த நிலையில், ஊடேதுர்க்கம் காட்டில் உள்ள 40 யானைகளும் புதன்கிழமை இரவு உணவுக்காக வெளியே வந்தன. அவை அருகில் உள்ள தொட்டே திம்மனஅள்ளி ஊராட்சி வெப்பாலம்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களுக்குச் சென்றன. அங்கு ரோஜா, ராகி, காய்கறிகளை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.
பின்னர், 40 யானைகளும், வியாழக்கிழமை அதிகாலை மீண்டும் ஊடேதுர்க்கம் காட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தன. வெப்பாலம்பட்டி ஏரி அருகே ரயில்வே பாலம் பகுதியில் யானைக் கூட்டம் சென்று கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த 6 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று, எதிர்பாராத விதமாக விவசாய நிலத்தில் இருந்த 30 அடி ஆழ தண்ணீர் இல்லாத வறண்ட கிணற்றில் விழுந்தது.
கிணற்றுக்குள் விழுந்ததும், யானை பயங்கர சத்தத்துடன் பிளிறியது. மற்ற யானைகள் கிணறு அருகே சென்றன. பயங்கர சத்தத்துடன் சிறிது நேரம் பிளிறின. பின்னர், அங்கிருந்து சென்று விட்டன. தகவலின்பேரில் வனத்துறையினர், போலீஸார் ஆகியோரும் அங்கு வந்தனர்.
அந்த இடத்துக்கு 2 ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, குழி வெட்டி யானை வெளியே வர பாதை அமைக்க முடிவு செய்யபட்டது. காலை 9 மணி அளவில் மீட்புப் பணிகள் தொடங்கின. கிணறு அருகில் குழி வெட்டப்படுவதை பார்த்த கிணற்றின் உரிமையாளர் ரோஜா, அதிகாரிகளிடம், தான் அந்த கிணற்று நீரை நம்பி விவசாயம் செய்து வந்ததாகவும், தற்போது வறண்டு விட்டதாகவும், கிணற்றை வெட்டினால் தன்னால் விவசாயம் செய்ய முடியாது எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.
இதையடுத்து, அவரிடம் பேசிய அதிகாரிகள், அப்பெண்ணுக்கு விதவை உதவித் தொகை கிடைக்கவும், சொட்டு நீர் பாசன முறையில் விவசாயம் செய்ய உதவிகள் செய்வதாகவும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, ராட்சத பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு அருகில் குழி தோண்டப்பட்டது. இதற்கிடையே, கிணற்றுக்குள் விழுந்த யானை நீண்ட நேரமாக பிளிறியதாலும், யானைகள் கூட்டத்தில் இருந்து தனியாகப் பிரிந்து விட்டதாலும், கிணற்றுக்குள் போதிய காற்றோட்டம் இல்லாததாலும், சோர்வுடன் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்தக் கிணற்றுக்குள் கரும்புகள் வெட்டி போடப்பட்டன. கரும்புகளை யானை சாப்பிட்டது. பின்னர், யானைக்கு வெல்லம் கலந்த நீர் வாளி மூலமாக கிணற்றுக்குள் இறக்கி வைக்கப்பட்டது. பின்னர், யானை உடல் சோர்வாக இருந்ததால், 2 டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, கிணற்றின் மேலே இருந்தவாறு குழாய் மூலமாக யானையின் மீது பீய்ச்சி அடிக்கப்பட்டது. தண்ணீர் உடம்பில் பட்டதும், யானை எழுந்து நின்றது. தகவல் அறிந்த தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி அங்கு வந்து பணிகளை பார்வையிட்டு, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார்.
மாலை 5 மணி அளவில் கிணற்றின் அருகில் முழுமையாக குழி வெட்டப்பட்டு, பாதை அமைக்கப்பட்டது. பின்னர், அந்தப் பாதை வழியாக யானை முட்டி போட்டப்படி வெளியே வந்தது. சுமார் 12 மணி நேரத்துக்குப் பிறகு வெளியே வந்தது. பின்னர், பயங்கர சத்தத்துடன் பிளிறியபடி ஊடேதுர்க்கம் காட்டுக்குள் ஓடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com