ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை: நடுக்குப்பத்தில் நீதிபதி இன்று ஆய்வு

சென்னையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தை விசாரணை நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் வெள்ளிக்கிழமை (பிப். 3) பார்வையிடவுள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை: நடுக்குப்பத்தில் நீதிபதி இன்று ஆய்வு

சென்னையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தை விசாரணை நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் வெள்ளிக்கிழமை (பிப். 3) பார்வையிடவுள்ளார். இதன்மூலம், அவர் தனது விசாரணையைத் தொடங்குகிறார்.
மேலும், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட உள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 17 ஆம் தேதி முதல் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தப் போராட்டங்களுக்குப் பிறகு திடீரென சென்னை உள்பட சில நகரங்களில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று தொடக்கம்: நீதிபதி ராஜேஸ்வரன் தனது விசாரணையை சென்னை நடுக்குப்பத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறார். வன்முறைச் சம்பவங்களால் குப்பத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இப்போதைய நிலைமை உள்ளிட்டவை குறித்து அவர் நேரில் ஆய்வு நடத்துகிறார்.
நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கு மூலமாக இருந்த காரணங்கள், சூழ்நிலைகளைக் கண்டறியவும், அதனால் பொது-தனியாரின் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதாரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
சம்பந்தப்பட்ட காவல் துறையினரால் உரிய அளவில் அளவில் பலப்பிரயோகம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து விசாரிக்கப்பட உள்ளது.
இப்படிப்பட்ட நிகழ்வுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் ஆணையம் பரிந்துரைக்கும். விசாரணையை முடித்து மூன்று மாத காலத்துக்குள் முடித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தாற்காலிக மீன் சந்தை திறப்பு

வன்முறைச் சம்பவத்தால் கடும் சேதத்துக்கு உள்ளான நடுக்குப்பம் மீன்சந்தை தாற்காலிமாக சீரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்களால் இந்த மீன் சந்தையானது முற்றிலும் தீக்கிரையானது. இதனால் இதை மீனவர்களும், பொது மக்களும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
கடும் சேதத்துக்கு உள்ளான மீன் சந்தைக்குப் பதிலாக தாற்காலிக அடிப்படையில் மீன் சந்தை உருவாக்கிக் தரப்படும் எனவும், நிரந்தரமான மீன் சந்தை விரைவில் கட்டமைக்கப்படும் என்றும் சட்டப் பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தாற்காலிக அடிப்படையில் மீன் சந்தை உருவாக்கப்பட்டு வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இந்தச் சந்தையை மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், மீன்வளத் துறை செயலாளர் (பொறுப்பு) ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com