குமாரபாளையம் பகுதியில் 55 சாயப் பட்டறைகள் இடித்து அகற்றம்

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த 55 சாயப் பட்டறைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கப்படும் சாயப் பட்டறை.
பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கப்படும் சாயப் பட்டறை.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த 55 சாயப் பட்டறைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
குமாரபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட அரசு அனுமதி பெறாத சாயப் பட்டறைகள் இயங்கி வருகின்றன. இப் பட்டறைகளில் சுத்திகரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றப்படும் சாயக் கழிவுகள் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால், குடிநீருக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் சிறிதளவு தண்ணீரும் மாசடைவதாக புகார் எழுந்தது.
மேலும், கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு காவிரியில் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்ட தண்ணீரும் கலங்கிய நிலையில் இருப்பதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் கழிவுகளை வெளியேற்றும் பட்டறைகள் குறித்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், மாவட்ட மாசுக் கட்டுபாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் கே.ரவிச்சந்திரன், குமாரபாளையம் வட்டாட்சியர் ஆர்.ரகுநாதன், துணை வட்டாட்சியர் சுப்பிரமணியம், ஈரோடு பறக்கும் படை அலுவலர் பழனிசாமி, உதவிப் பொறியாளர்கள் ரவிச்சந்திரன், டி.கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் குமாரபாளையம் பகுதியில் மூன்று குழுக்களாகப் பிரிந்து, அனுமதியின்றி இயங்கிய பட்டறைகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து அகற்றினர்.
காவேரி நகர், கொளத்துக்காடு மற்றும் வேமன்காட்டுவலசு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந் நடவடிக்கைகளில், 55 சாயப் பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன. இதில், சாயப் பட்டறைகளில் இருந்த மேற்கூரைகள், சாயமிடும் சிமென்ட் தொட்டிகள், ஆயில் எஞ்ஜின்கள், நூல்களைப் பிழிய பயன்படுத்தப்படும் கிட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டன.
குடிநீரில் கலக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையிலும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வெளியேற்றும் சாயப் பட்டறைகள் மீதான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாசுக் கட்டுபாட்டு வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர். சம்பவ இடங்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இன்னும் ஒரிரு தினங்களில், பள்ளிப்பாளையம் பகுதியில் விதிமீறி இயங்கும் சாயப் பட்டறைகள் அகற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com