ஜெயலலிதா மரணம், ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகியதாக வெளியாகும் செய்தி என எல்லாமே மர்மமாக உள்ளது: மு.க. ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகியதாக வெளியாகும் செய்தி என எல்லாமே இந்த அரசில் மர்மமாக உள்ளது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம், ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகியதாக வெளியாகும் செய்தி என எல்லாமே மர்மமாக உள்ளது: மு.க. ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகியதாக வெளியாகும் செய்தி என எல்லாமே இந்த அரசில் மர்மமாக உள்ளது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று எண்ணூர் துறைமுகப்பகுதிக்கு நேரில் சென்று, இரு கப்பல்கள் மோதிய விபத்தில் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய் அகற்றும் பணிகளை மேற்பார்வையிட்டார். மேலும், இதனால் பாதிக்கப்பட்டு உள்ள மீனவர் குடியிருப்புப் பகுதிகளுக்கும் சென்று, அங்கிருந்த பொதுமக்கள், மீனவர்கள் ஆகியோரை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:

கேள்வி: சனிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் கடல் நீரில் ஏராளமான எண்ணெய் கலந்து பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பதில்: கச்சா எண்ணெய் கல நீரில் கலந்து இருப்பதால், கடந்த ஒரு வாரகாலமாக நீர் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்ல, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு இருக்கக்கூடிய மீனவ மக்களுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய 32 கிலோமீட்டர் பரப்பளவிற்கு கச்சா எண்ணெய் கடலில் கலந்து இருக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், மீஞ்சூர், நெம்மேலி ஆகிய பகுதிகளில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இதனால் என்ன நிலைமைக்கு உள்ளாகுமோ என்ற கவலை உருவாகி இருக்கிறது. எனவே, மாநில அரசு இதில் உடனடியாக கவனம் செலுத்தி, ஒரு நிபுணர் குழுவை அமைத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள நான் கடமைப்பட்டு இருக்கின்றேன்.

கப்பல் நிறுவனங்களிடம் இருந்து மீன்பிடி தொழில் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, கடல் நீரில் கலந்துள்ள எண்ணெயை பிரித்தெடுக்க செய்யப்பட்டு கொண்டு இருக்கக்கூடிய பணிகளுக்கு ஆகக்கூடிய செலவு உள்ளிட்ட அனைத்தையும் வசூல் செய்யக்கூடிய விதத்தில் இதற்குரிய வழக்கை நடத்திட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் அந்த நிறுவனங்கள் இழப்பீட்டுத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அவர்களிடம் இருந்து இழப்பீட்டுத்தொகையை பெறும் வரை மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய மக்களுக்கு முதலில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மீனவர்களுக்கான பாதிப்பு ஒருபக்கம் இருந்தாலும், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கக்கூடிய நிலையில், ஒரு மோசமான சூழ்நிலை உருவாகும் என்ற அச்சம் இதனால் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், நேற்றுவரையிலும் தமிழகத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் இந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. நேற்றுதான் வந்திருக்கிறார் என்பது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. ஆகவே, தமிழக அரசினைப் பொறுத்தவரையில், இது மத்திய அரசின் பொறுப்பு என்று தட்டிக்கழித்து விடாமல், மத்திய அரசை வலியுறுத்தி, வற்புறுத்தி, அவர்களோடு இணைந்து, இந்த நிவாரணப் பணிகளில் மாநில அரசு ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ள நான் கடமைப்பட்டு இருக்கிறேன். மீனவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்டுள்ள் இந்த பாதிப்பை உடனடியாக களைய தீவிரமான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

இந்தப் பிரச்னை தொடங்கிய நேரத்தில் சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர், நம்முடைய நண்பர் கே.பி.பி.சாமி. சட்டமன்றத்தில் நேரமில்லா நேரத்தை பயன்படுத்தி, இந்தப் பிரச்னையை கிளப்பி, இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும், அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்பதை சொல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்திய நேரத்தில், அவரை முழுமையாக பேசுவதற்கு கூட விடவில்லை. அதன் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் குறுக்கிட்டு, சாமி என்ன சொல்ல இருந்தாரோ அதனை நான் அவையில் பேசி, அரசின் கவனத்தை ஈர்த்து இருக்கிறேன்.

அப்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து என்ன பதில் சொன்னார் என்று கேட்டால், 1000 லிட்டர் அளவுக்குதான் கடலில் கச்சா எண்ணெய் கலந்திருக்கிறது என்று ஒரு தவறான தகவலை தந்தார். ஆனால், இன்றைக்கு பத்திரிகைகள், ஊடகங்களில் வந்துள்ள செய்தி என்னவென்று கேட்டால், இதுவரையில் 72 மெட்ரிக் டன் அளவுள்ள ரசாயன எண்ணெய் எடுக்கப்பட்டு இருக்கிறது என்று ஆதாரங்களோடு வந்திருக்கிறது. இதில் இருந்தே அரசு எந்தளவுக்கு அலட்சியமாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது.

அதுமட்டுமல்ல, இதனால் பாதிக்கப்பட்டு உள்ள, மீன்பிடி தொழிலை நம்பியுள்ள மீனவர்களையும், தாய்மார்களையும், சகோதரர்களையும் நான் இப்போது சந்தித்தேன். அவர்கள், “வர்தா புயல் தொடங்கி தொடர்ந்து நாங்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டு வருகிறோம், எனவே, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இந்த அரசிடம் வலியுறுத்தி, வற்புறுத்தி ஒரு நல்ல வாழ்வை எங்களுக்கு அமைத்துத் தரவேண்டும், உடனடியாக நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி, எங்களுக்கு வழங்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்”, என்று வருத்தப்பட்டு, கண்கலங்கி, அழுத நிலையில் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்.

சட்டமன்றத்தில் மட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் இந்தப் பிரச்னையை சுட்டிக்காட்டி இருக்கிறார். எனவே, நான் மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

கேள்வி: எத்தனை டன் எண்ணெய் கடலில் கலந்திருக்கிறது?

பதில்: இன்றைக்கு பத்திரிகைகளில் ஆதாரங்களுடன் செய்தி வந்திருக்கிறது. 72 மெட்ரிக் டன் அளவுக்கு எண்ணெய் அகற்றப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. அதைக்கூட சொல்ல முடியாத நிலைமையில் தான் இந்த அரசு இருக்கிறது.

கேள்வி: எண்ணெய் கடலில் கலந்துள்ள விவகாரத்தி, அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ’இது மத்திய அரசு சம்மந்தப்பட்ட விஷயம்’, என்று சொல்லி விட்டார். ஆனால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி கொடுக்கும்போது, ’இது மாநில அரசு தொடர்பான விஷயம், காரணம் இது கரை அருகில் நடந்திருக்கிறது’, என்று சொல்லி இருக்கிறார். எனவே, இரு அரசுகளும் இதை புறக்கணிப்பது போல உள்ளதே?

பதில்: இதில் லாவணி பாட விரும்பவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசா, மாநில அரசா அல்லது பொன். ராதாகிருஷ்ணன் சொன்னது சரியா அல்லது ஜெயக்குமார் சொல்வது சரியா போன்ற பிரச்னைகளுக்கு செல்ல நான் விரும்பவில்லை. பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் மீனவர்கள். இது தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. குறிப்பாக சென்னையில் உள்ளது. எனவே, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மாநில அரசும் உடனே நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பது தான் எனது கருத்து.

கேள்வி: இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்தவர் இருக்கிறார். எனவே நிவாரணத்தொகை முறையாக வழங்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கையாக முதல்வரை சந்திப்பது, போராட்டம் நடத்துவது போன்ற வேறு ஏதாவது நடவடிக்கையில் ஈடுபடுவீர்களா?

பதில்: நிச்சயமாக. இப்போது நாங்கள் இங்கு வந்து நேரில் பார்த்து இருக்கிறோம். எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் இங்கேயே தங்கி இருந்து எல்லா பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தேவைப்பட்டால் நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பணிகளிலும் ஈடுபடுவோம்.

கேள்வி: ஷீலா பாலகிருஷ்ணன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறதே?

பதில்: அரசு தரப்பில் இருந்து எதுவும் சொல்லப்படவில்லை. ராஜிநாமா செய்ததாக சொல்லப்படும் அந்த செய்தியும் வரவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்ல விரும்புவது, ஓய்வுபெற்று இருக்கக்கூடியவர்களுக்கு தான் அரசு பணியில் இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பணி மூப்பு அடிப்படையில் சில பதவிகளை உருவாக்கித் தர வேண்டிய இந்த அரசு, இதுவரை அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை. இந்த அரசைப் பொறுத்தவரையில் ஒரு மிகப்பெரிய மர்மமான நிலையில் தான் இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் என்ன என்பதும் மர்மமாக இருக்கிறது. அவரது மரணம் எப்படி நடந்தது என்பதும் மர்மமாக இருக்கிறது. அதுபோலவே, இப்போது அதிகாரிகள் ராஜிநாமாவா, இல்லையா என்பதும் மர்மமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com