மாநில உரிமைகள் பறிபோகின்றன: மு.க.ஸ்டாலின்

மாநில உரிமைகள் பறிபோகும் சூழலில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைதியாக இருப்பது வருத்தம் அளிப்பதாக திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாநில உரிமைகள் பறிபோகின்றன: மு.க.ஸ்டாலின்

மாநில உரிமைகள் பறிபோகும் சூழலில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைதியாக இருப்பது வருத்தம் அளிப்பதாக திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
மத்திய நிதிநிலை அறிக்கையில் சர்க்கரை மானியத்துக்கு வெறும் ரூ.200 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டு இருப்பதால், இனி மாநில அரசுகளுக்குச் சர்க்கரைக்கு வழங்கும் மானியத்தை மத்திய அரசு நிறுத்தி விடும் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியாக உள்ளது.
இதனால் நியாய விலைக் கடைகளில் குறைந்த விலைக்கு சர்க்கரை வழங்கும் திட்டத்துக்கு எதிர்காலத்தில் ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
சர்க்கரை மானியம் ரத்து என்று ஆரம்பித்து, பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி, மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கும் ஆபத்து ஏற்பட்டு, ஒட்டுமொத்த குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொது விநியோகம் எட்டாக் கனியாக ஆகிவிடக் கூடாது.
இப்போதே துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை பொது விநியோகத் திட்டத்தில் வழங்க அரசு ஆணை வழங்காமல் காலதாமதம் செய்வதால், மக்களுக்குக் கொடுக்கப்படும் பொருள்கள் ஏதும் நியாய விலைக் கடைகளில் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர்.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அதிமுக அரசு கையெழுத்துப் போட்டதால் இந்த ஆபத்து தமிழகத்துக்கு ஏற்பட்டிருக்கிறதோ என்று அஞ்சுகிறேன். மாநிலத்துக்குக் கிடைக்க வேண்டிய மானியம் பறிபோகும் சூழ்நிலையில்கூட முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அமைதி காப்பது பெரும் கவலையளிக்கிறது.
எனவே, உதய் திட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் போன்றவற்றுக்கு சம்மதித்துள்ள அதிமுக அரசு இப்படி என்னென்ன மாநில நலன்களை, உரிமைகளைத் தாரை வார்த்துள்ளது என்பது பற்றிய ஒரு வெள்ளை அறிக்கை உடனடியாக வெளியிட வேண்டும். மத்திய அரசு சர்க்கரை மானியத்தை ரத்து செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த அதிமுக அரசு அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com