சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட வேண்டும்: வைகோ

விவசாயத்துக்கு அழிவைத் தரும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மாணவர்கள், இளைஞர்கள் முன்வர வேண்டும் என, மதிமுக பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்தார்.
கலிங்கப்பட்டியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலர் வைகோ.
கலிங்கப்பட்டியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலர் வைகோ.

விவசாயத்துக்கு அழிவைத் தரும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மாணவர்கள், இளைஞர்கள் முன்வர வேண்டும் என, மதிமுக பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியைத் தொடங்கிவைத்து அவர் இவ்வாறு கூறினார்.
சீமைக் கருவேல மரங்களால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் உறிஞ்சப்படுவதால், அவற்றை அகற்ற வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வைகோ வழக்குத் தொடுத்து அவரே வாதாடினார்.
இதையடுத்து, 13 மாவட்டங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள மேலமரத்தோணி பெரியகுளத்தில் பரவியிருந்த கருவேல மரங்களை அகற்றும் பணியை சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
350 ஏக்கர் பாசன வசதி பெறக்கூடிய, சுமார் 320 ஏக்கர் கொண்ட இந்தக் குளத்தில் கருவேல மரங்கள் ஏராளமாக உள்ளன. இந்த மரங்களை அகற்றும் பணியில் ஊர்ப் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என 300-க்கும் ஈடுபட்டனர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் வைகோ கூறியது:
சீமைக் கருவேல மரங்கள் விவசாயத்துக்கு பெரிய அழிவைத் தருகிறது.
இதை முழுவதும் அகற்றாவிட்டால் தமிழகத்தில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. சீமைக் கருவேல மரங்களின் வேர் ஆழத்தில் செல்வதால், கிணறுகளில் 50 அடி 100 அடி தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த மரத்துக்குக் கீழே பசுமாடு நின்றால் சினை பிடிப்பதில்லை.
அரசே முழுமையாக கருவேல மரங்களை அகற்ற முடியாது. மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் இணைந்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றார் அவர்.
மதிமுக மேற்கு மாவட்டச் செயலர் தி.மு.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com