அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: வீரவிளையாட்டில் இளைஞர்கள் உற்சாகம்

இரண்டு ஆண்டுகால தடைக்குப் பிறகு, மதுரை அவனியாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய 75க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர். அவர்களில் 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மதுரை அவனியாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகளை தீரமுடன் அடக்கப்பாயும் காளையர்கள்.
மதுரை அவனியாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகளை தீரமுடன் அடக்கப்பாயும் காளையர்கள்.

இரண்டு ஆண்டுகால தடைக்குப் பிறகு, மதுரை அவனியாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய 75க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர். அவர்களில் 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற தடைக்குப் பிறகு தமிழக அரசு இயற்றிய சட்டம் மூலம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 916 காளைகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 626 காளைகள் 10 கால்நடை மருத்துவக் குழுவால் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 52 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. காளையை அடக்க 782 பேர் பதிவு செய்ததில் 620 மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டை தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பச்சைக் கொடி காட்டி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ், மாநகராட்சி ஆணையர் சந்தீப்நந்தூரி, மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். போட்டி விதிமுறைகளையும் ஆட்சியர் அறிவித்தார்.
முதலில் அவனியாபுரம் கோயில் காளைகள் 4 அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் வரிசையாக காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. திருப்பரங்குன்றம்-அவனியாபுரம் சாலையில் நடந்த ஜல்லிக்கட்டில் பனையூர், கோசாகுளம் பகுதி காளைகள் சீறிப் பாய்ந்தன. சில காளைகள் மட்டுமே நின்று விளையாடின. காளைகளை அடக்கி வீரர்களில் குறிப்பிட்ட எல்லை வரை கீழே விழாமல் சென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாமல் தப்பிய காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன. காளையை அடக்கும் மைதானத்தில் சுழற்சி முறையில் வீரர்கள் காளமிறங்கினர். ஒரு நேரத்தில் சுமார் 150 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
சில காளைகள் கூட்டத்துக்குள் ஓடி அவை முட்டியும், காளையைப் பார்த்து ஓட்டம் பிடித்த சிலர் கீழே விழுந்தும் காயமடைந்தனர். சில காளைகள் திரும்பி வந்து முட்டியதிலும் சிலர் காயமடைந்தனர். சாலையின் இருபுறமும் பார்வையாளர்கள் நிற்க அமைக்கப்பட்ட தடுப்புகளை தாண்டிய சில காளைகளால் கூட்டத்தினர் அவ்வப்போது சிதறி ஓடினர். மாலை 4 மணி வரை 327 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காயமடைந்த 74 பேரில் 15 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் பாலமேடு சோணை மற்றும் ராமநாதபுரம் சூரியா (22) உள்ளிட்ட 7 மாடுபிடி வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கப்பலூரைச் சேர்ந்த மாரிக்கனியை காளை முட்டியதில் குடல் சரிந்தது. எனவே, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூட்டத்தில் காளை புகுந்ததில் சென்னையைச் சேர்ந்த புகைப்படக்காரர் நாகேந்திரனுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

கட்டில், பீரோ, தூக்குச் சட்டி!

* நிகழ்ச்சியில் ஹெச். வசந்தகுமார் எம்.எல்.ஏ. (நாங்குநேரி) திரைப்பட இயக்குநர்கள் கெளதமன், அமீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி. ராஜசேகருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.

* ஜல்லிக்கட்டை காண பெரிய மின்னணுத் திரைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டு நடைபெற்ற பகுதியில் இருந்த கட்டடங்களில் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் ஏறி நின்று பார்த்தனர்.

* ஜல்லிக்கட்டைக் காண வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் வந்திருந்ததால் தாற்காலிக கடைகளில் வியாபாரம் சூடுபிடித்தது. சிலர் இலவசமாக மோர் உள்ளிட்ட பானங்களை வழங்கினர்.

* அவனியாபுரம் பகுதியில் மட்டும் காலை முதல் மாலை வரை 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

* காளைகள் அடக்கும் வீரர்களுக்கு பச்சை நிற கால்சட்டையும், மஞ்சள் நிற பனியனும் வழங்கப்பட்டிருந்தன. காளையை அடக்குவோருக்கு பரிசுகளாக பீரோ, கட்டில், பயணப் பை, தூக்குச் சட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com