இது புதிதல்ல!

சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத ஒருவர், சட்டப்பேரவை உறுப்பினர்களால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதும், முதலமைச்சராவதும் புதிதொன்றுமல்ல.
இது புதிதல்ல!

சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத ஒருவர், சட்டப்பேரவை உறுப்பினர்களால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதும், முதலமைச்சராவதும் புதிதொன்றுமல்ல. இதற்கு முன்னால், ராஜாஜி, காமராஜர், வி.என். ஜானகி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வர்களானபோது சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருக்கவில்லை.
1952 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்ற ராஜாஜி, குற்றாலத்தில் தனது நண்பர் "ரசிகமணி' டி.கே. சிதம்பரநாத முதலியாரின் வீட்டில் தங்கி இருந்து இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். ராஜாஜி முதலமைச்சரானால் மட்டுமே, காங்கிரஸூக்குப் பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்தி ஆட்சியைத் தக்க வைக்க முடியும் என்கிற கருத்து பரவலாக இருந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரான காமராஜரும், "தினமணி' நாளிதழின் முன்னாள் ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கமும் அவரை அணுகி, முதலமைச்சராகும்படி கேட்டுக் கொண்டனர். கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்ற பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிட விரும்பவில்லை என்று ராஜாஜி மறுத்துவிட்டார். மேலவைக்கு ஆறு மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்கலாம் என்று சமாதானப்படுத்தி முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ள வைத்தனர். உழவர் உழைப்பாளர் கட்சி, காமன்வீல் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் காங்கிரஸ் அரசுக்குப் பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்தி ராஜாஜி முதல்வராகத் தொடர்ந்தார்.
1954-இல் ராஜாஜி பதவி விலகியதைத் தொடர்ந்து, காமராஜர் முதல்வராகப் பதவி ஏற்றபோது அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கவில்லை. முதல்வரான பிறகுதான், குடியாத்தம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார்.
1987-இல் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டது. பெரும்பாலான அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என். ஜானகிக்கு ஆதரவாக இருந்தனர். சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத வி.என். ஜானகி சட்டப்பேரவை அ.தி.மு.க. கட்சித் தலைவராகவும், முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலம் இல்லாததால் ஆட்சி கலைக்கப்பட்டது.
2001-இல் ஜெயலலிதா முதல்வரானபோது அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கவில்லை. அடுத்த நான்கு மாதங்களும் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாமல்தான் 2001 செப்டம்பரில் பதவி விலகுவது வரை முதல்வராகத் தொடர்ந்தார். பிறகு, 2002-இல் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகிறார்.
சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்து, ஆட்சி மாற்றத்தின் மூலம் முதல்வரானவர்கள் எம். பக்தவச்சலம், மு. கருணாநிதி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும்.
1963-இல் காமராஜ் திட்டத்தின்கீழ், அன்றைய முதல்வர் காமராஜர் தனது முதலமைச்சர் பதவியைத் துறந்தபோது, அவரது அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருந்தவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம். பக்தவச்சலம் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல 1969-இல் சி.என். அண்ணாதுரை காலமானபோது, அவரது அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்த மு. கருணாநிதி, முதல்வராக சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் 2001, 2014, 2016 என்று மூன்று முறை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அசாதாரண சூழலில்தான். முதல் இரண்டு தடவையும் அன்றைய முதல்வர் ஜெயலலிதா பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மூன்றாவது முறை, ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார்.
சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத இன்னொருவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது 1967-இல். சி.என். அண்ணாதுரையின் தலைமையில் தேர்தலில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. ஆனால், அண்ணா தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதல்வரான அவர் மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து, தமிழக மேலவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com