ஜெயலலிதா உடலில் துளைகளா? டாக்டர் சுதா சேஷய்யன் பதில்

ஜெயலலிதாவின் உடலைப் பதப்படுத்தும்போது அவரது முகத்தில் பெரிய அளவிலான துளைகள் எதுவும் இல்லை என்று சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறையின் இயக்குநர் சுதா சேஷய்யன் கூறினார்.
ஜெயலலிதா உடலில் துளைகளா? டாக்டர் சுதா சேஷய்யன் பதில்

ஜெயலலிதாவின் உடலைப் பதப்படுத்தும்போது அவரது முகத்தில் பெரிய அளவிலான துளைகள் எதுவும் இல்லை என்று சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறையின் இயக்குநர் சுதா சேஷய்யன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.35 மணியளவில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் இருந்து அழைப்பு வந்தது.
ஜெயலலிதா உயிரிழந்த விவரத்தையும், அவரின் உடலை பதப்படுத்துவதற்கான குழுவை அனுப்பும்படியும் இருவரும் கூறினர். அதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த குழுவினரோடு அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றேன்.
மருத்துவமனையில்தான் உடலை பதப்படுத்துவதற்கான பார்மலின் திரவத்தைக் கலந்து தயாரித்தோம். அதன் பின்னர் திரவம் செலுத்தப்பட்டது. உடல் நிறத்தை அவ்வாறே தக்க வைக்கும் வகையில், திரவத்தின் கலவை அளவு மாற்றப்பட்டது.
காலில் குழாய் செருகி...: பதப்படுத்துவதற்கான திரவமானது ரத்தக் குழாய்களில் நிரப்பப்படும். ஜெயலலிதாவுக்கு வலது காலில் சிறிய குழாய் செருகி அதன் வழியாக திரவத்தைச் செலுத்தினோம். சுமார் 15 நிமிஷங்களில் திரவத்தைச் செலுத்தும் பணி நிறைவடைந்தது.
பதப்படுத்துவதற்கான செய்முறைக்கு முன்பாக உடலை ஆராய்ந்தேன். பொதுவாக, உடலில் திசுக்கள் ஏதேனும் சேதமடைந்திருந்தால், அதன் வழியாக பதப்படுத்தும் திரவம் வெளியேறும். ஆனால் அவரின் உடலில் எவ்விதப் பிரச்னையும் இல்லாததால், அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. அவரது உதடுகளிலும், மூக்கில் மட்டுமே ஓரிரு துளிகள் வெளியேறின. நீண்ட நாள் சிகிச்சை, படுக்கையில் இருந்ததால், அவரது உடலில் சிறிய சிறிய துளைகள் காணப்பட்டன. சமூக வலைதளங்களில் வெளியானது போன்று அவரது முகத்தில் பெரிய அளவிலான துளைகள் எதுவும் இல்லை.
உதடுகள் மட்டும்...: "டிரக்யாஸ்டமி' சிகிச்சை பெற்றவர்களின் உதடுகள் தடித்து காணப்படும். அவ்வாறே அவரது உதடுகள் தடித்து காணப்பட்டன.
முக்கிய நபர்கள் இறந்து, அவர்களது உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கும்போது உடல் கெட்டுப் போகாமல் இருக்கவும், அஞ்சலி செலுத்த வருவோருக்கு துர்நாற்றம் எதுவும் வீசாமல் இருப்பதற்கும் உடலைப் பதப்படுத்துவது வழக்கம். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் உடலும் இதே வகையில்தான் பதப்படுத்தப்பட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com