வேதாரண்யத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவர்கள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தட்டம்மை - ரூபெல்லா (விளையாட்டம்மை) தடுப்பூசி போட்டுக்கொண்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.
வேதாரண்யத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவர்கள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தட்டம்மை - ரூபெல்லா (விளையாட்டம்மை) தடுப்பூசி போட்டுக்கொண்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.
வேதாரண்யம் பகுதியில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் 15 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம்கள் திங்கள்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் சி.க. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 9 ஆம் வகுப்பு மாணவர் ரா. ராக்கேஷ் (14) மயங்கி விழுந்தார். வேதாரண்யம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி மு. சௌந்தர்யா (14) மயக்கமடைந்தார். 10 ஆம் வகுப்பு மாணவி ச. நிஷாந்தினி (15) ஒவ்வாமை ஏற்பட்டு பாதிப்படைந்தார். இவர்கள் உடனடியாக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல், கரியாப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரராஜன் தலைமையில் தடுப்பூசி போடும் பணிகள் முதலில் 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வந்தது.
அப்போது, தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 ஆம் வகுப்பு மாணவர் சு. சபாபதி (15) மயங்கி விழுந்ததையடுத்து, தடுப்பூசி போடும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பாதிப்படைந்த மாணவரை மருத்துவக் குழுவினரே வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு மருத்துவமனை தலைமை மருத்துவர் அக்பர் அலி உள்ளிட்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
மாணவ, மாணவிகள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து வேதாரண்யம் மருத்துவமனைக்கு வந்த நாகை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் விஜயலட்சுமி, சிகிச்சை பெற்ற மாணவர்களைச் சந்தித்து விசாரித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விஜயலட்சுமி கூறியது:
பொதுவாக ஊசி போடும்போது ஏற்படும் வலி அல்லது பயத்தின் பெயரில் பெரியவர்களுக்குக் கூட மயக்கம் ஏற்படும். மாணவர்களுக்கு தடுப்பூசியால் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மயக்கம் ஏற்பட்ட மாணவ, மாணவிகள் 4 பேரும் நல்ல முறையில் உள்ளனர். சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பினோம். ஆனால் பெற்றோர்களுக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாக மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தட்டம்மை - ரூபெல்லா (விளையாட்டம்மை) தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பானது. அச்சமடையத் தேவையில்லை.
தடுப்பூசி போடும் பணி பிப். 28 வரை நடைபெறும். சாப்பிடாமல் வரும் மாணவர்கள் சோர்வாக இருந்தால் மயக்கம் வருவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே, செவ்வாய்க்கிழமை (பிப். 7) முதல் தடுப்பூசி போடும்போது, சோர்வாக உள்ள மாணவர்களுக்கு சர்க்கரை - உப்புக்கரைசல் குடிநீர் கொடுத்த பிறகே தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com