குன்னூர் அருகே யானைகள் நடமாட்டம்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ரன்னிமேடு அருகே யானைகள் முகாமிட்டிருப்பதால், வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வலியுறுத்தியுள்ளனர்.

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ரன்னிமேடு அருகே யானைகள் முகாமிட்டிருப்பதால், வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, வன விலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் வனப் பகுதியிலிருந்து மூன்று யானைகள் குன்னூர் வனச் சரகத்துக்கு உள்பட்ட பர்லியாறு பகுதிக்கு வந்தன. பின்னர், அந்த யானைகள் உணவு தேடி மரப்பாலம், ரன்னிமேடு ரயில் நிலையப் பகுதிக்கு வந்தன. இந்த யானைகளை அங்கிருந்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, குன்னூர் நகரப் பகுதியை ஒட்டியுள்ள கன்னி மாரியம்மன் குடியிருப்பு பகுதிக்கு வந்தன. பின்னர், அருகிலுள்ள டைகர்ஹில் பகுதியில் அந்த யானைகள் முகாமிட்டன. இந்த யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அப்போது, அந்த யானைகள் காட்டேரி அரசு விதைப் பண்ணை பகுதிக்கு வந்தன. இதையடுத்து, விதைப் பண்ணை ஊழியர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
தீப் பந்தம், ஒலிபெருக்கி மூலம் யானைகளை விரட்டும் முயற்சி நடைபெற்றது. அதில், நஞ்சப்ப சத்திரம் தேயிலைத் தோட்டம் வழியாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை அந்த யானைகள் கடந்து, ரன்னிமேடு ரயில் பாதை அருகே உள்ள காப்புக் காட்டுக்குள் சென்றன. இந்த யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலைக்கு மீண்டும் வர வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
குட்டி யானை சாவு: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் காபி தோட்ட நீரோடையில் குட்டி யானை இறந்து கிடப்பதாக, வனத்துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற வனத்துறையினர், அந்தக் குட்டி யானையின் சடலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், குட்டியைப் பிரிந்த தாய் யானை உள்ளிட்ட யானைகள் மிகுந்த ஆக்ரோஷத்தில் இருந்தன. இதனால், குட்டி யானையின் சடலத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த யானைகளை அங்கிருந்து விரட்டும் முயற்சியில், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com