பி.எச். பாண்டியன் குற்றச்சாட்டு: பண்ருட்டி பதில்

மக்களின் விருப்பத்துக்கு மாறாக சசிகலா செயல்படுவதாக சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர் குற்றஞ்சாட்டினர்.
பி.எச். பாண்டியன் குற்றச்சாட்டு: பண்ருட்டி பதில்

மக்களின் விருப்பத்துக்கு மாறாக சசிகலா செயல்படுவதாக சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர் குற்றஞ்சாட்டினர்.
சென்னையில் அவர்களது இல்லத்தில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். அப்போது பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதா இறந்த 25 நாள்களில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். 60 நாள்களில் அவர் முதல்வராகத் தேர்வு செய்யப்படுகிறார். மக்களின் விருப்பத்துக்கு மாறாக இப்போதைய செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தாற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா, எப்படி தமிழக முதல்வராக முடியும்?
சட்ட திட்ட விதிகள்: அதிமுக சட்டதிட்ட விதிப்பிரிவு 19 (8)-ன்படி, கட்சி சார்ந்த கொள்கைகளையும், திட்டங்களையும் வகுக்கக் கூடிய அதிகாரம் மட்டுமே பொதுக்குழுவுக்கு உள்ளது. அது அதிமுக தொண்டர்களை கட்டுப்படுத்தும். ஆனால், 2,500 பேரைக் கொண்ட பொதுக்குழுவானது சசிகலாவை எப்படித் தேர்வு செய்ய முடியும்? தாற்காலிமாகத் தேர்வு செய்யப்படும் பொதுச் செயலாளருக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளர் இருந்த காலத்தில் அவர் யார் யாரை நியமித்தாரோ அவர்களே, தாற்காலிக பொதுச் செயலாளரின் காலத்திலும் தொடர்வார்கள் என விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

அதிமுகவில் முக்கிய பதவிகள் கிடைக்காததாலேயே தலைமைக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூறுவதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் தெரிவித்தனர்.
சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை கூட்டாக அளித்த பேட்டி:
இன்றைய சூழ்நிலையில் தேவையில்லாமல், வேண்டுமென்றே வதந்திகளை, குழப்பங்களை உருவாக்க சில தீயசக்திகள் முற்படுகின்றன.
இதனைச் சமாளிக்கவும், மறைந்த ஜெயலலிதா காட்டிய வழியில் அரசியல் பயணத்தைத் தொடரவும் அதிமுகவில் உள்ள அனைவரும் முழுமூச்சோடு பணியாற்றி வருகிறோம்.
அதன்படியே, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை பொதுக் குழுவில் முடிவு செய்து பொறுப்பேற்க வைத்தோம். சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டத்திலும் சிறு சலனமும் இல்லாமல் ஒருமனதாக ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டுமென சசிகலாவை கேட்டுக் கொண்டோம்.
அதிமுக ஒற்றுமையுடனும், கட்டுப்பாட்டுடனும் இயங்கி வருகிறது. ஆனால் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். ஏதேனும் மாறுபட்ட கருத்துகள் இருந்தால் அதனை எங்களிடமோ, கட்சியின் பொதுச் செயலாளரிடமோ எடுத்துக் கூற வேண்டும். அதைவிடுத்து ஊடகங்களில் உண்மைக்கு மாறான கருத்துகளைச் சொல்லியுள்ளார்.
1987-இல் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்தவர் பி.எச்.பாண்டியன். ஜானகி அணியின் சார்பிலும் தேர்தலில் போட்டியிட்டவர். 1996-ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது வழக்குத் தொடரவும் காரணமாக இருந்தவர். அப்படி இருந்தும் அதையெல்லாம் மன்னித்து ஜெயலலிதா, பி.எச்.பாண்டியனின் குடும்பத்திலுள்ள உள்ள 5 பேருக்கும் பதவிகளைக் கொடுத்துள்ளார். இப்போது பதவி இல்லாததால் குற்றம் கூறுகிறார்.
பொதுக்குழுவில் ஏன் தேர்வு? திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டது பொதுக்குழு மூலமாகத்தான். இதனாலேயே கட்சியின் பொதுச் செயலாளர் என்பவர் அதிமுக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து அதன்படி சட்டதிட்ட விதிகள் அமைக்கப்பட்டன.
கட்சி உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யும் நடைமுறைக்கு கால அவகாசம் தேவை. எனவே, பொதுக்குழு ஒருவரை பரிந்துரை செய்ய சட்ட விதிகளில் தடையேதுமில்லை. அதேசமயம், பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யும் அதிமுக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உரிமையும் பறிக்கப்படவில்லை.
யாரை முதல்வராக வைத்துக் கொள்வது என்பது அதிமுகவின் முடிவு. சசிகலாவைத் தேர்வு செய்வது குறித்து மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. அதிமுக அமைப்புக்குள்ளேயே வேறு ஒருவரை தேர்வு செய்வது என்பது எங்களது பிரச்னை. அதன்மூலம் மக்களுக்கு நல்லது நடக்கிறதா என்பதை ஆராய வேண்டியது உங்களது (ஊடகங்கள்) பிரச்னை.
சசிகலாவின் திறமை: அண்ணா மறைந்த பிறகு, நெடுஞ்செழியன் முதல்வரானார். அதன்பிறகு, கருணாநிதி மக்களைச் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றா முதல்வரானார்? இதற்கு திமுக பதில் சொல்ல வேண்டும். முதல்வராக சசிகலா வந்தவுடன் அவரது திறமை வெளிப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com