அதிமுகவை குடும்ப சொத்தாக மாற்றுவதற்கு சசிகலா கபடநாடகம் ஆடுகிறார்: பன்னீர்செல்வம்

கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றி அதிமுகவை குடும்ப சொத்தாக மாற்றுவதற்கு சசிகலா கபடநாடகம் ஆடுகிறார் என முதல்வர்
அதிமுகவை குடும்ப சொத்தாக மாற்றுவதற்கு சசிகலா கபடநாடகம் ஆடுகிறார்: பன்னீர்செல்வம்

சென்னை: கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றி அதிமுகவை குடும்ப சொத்தாக மாற்றுவதற்கு சசிகலா கபடநாடகம் ஆடுகிறார் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் இல்லத்தில் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்.

மதுசூதனனின் ஆதரவிற்குப்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், சசிகலா என்மீது செயற்கையான குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் சில முக்கிய தகவல்களை வெளியிடுவேன்.

நான் துரோகம் செய்து விட்டதாகவும், கபடநாடகம் போடுவதாகவும் கூறுகிறார் சசிகலா. யார் துரோகம் செய்தது, யார் கபடநாடகம் போடுகிறார்கள் என்று மக்களுக்கும், கோடான கோடி தொண்டர்களுக்கும் தெரியும் என்றார்.

ஜெயலலிதாவிற்கு உதவி செய்ய மட்டுமே வந்த சசிகலா சதி செய்ததால்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கினார். அதன்பின், ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேறினார் சசிகலா. இதனைத்தொடர்ந்து, சசிகலாவின் கணவர் நடராஜன் உள்ளிட்ட உறவினர்களையும், கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஜெயலலிதா அதிரடியாக நீக்கினார்.

கட்சியிலிருந்து நீக்கிய சில நாட்களிலேயே, சசிகலா மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதிக்கொடுத்தார். பின்னர், மன்னித்து ஏற்றுக்கொள்வதாக அவரை போயஸ் தோட்டத்திற்குள் அனுமதித்தார்.

சசிகலா எழுதிய அந்த மன்னிப்பு கடிதத்தில், எனது பெயரை பயன்படுத்தி என்னுடைய உறவினர்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது அதிமுகவுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல குழப்பங்களும் விளைவிக்கப்பட்டது. இது எனக்கு தெரியாமல் நடந்தது உண்மை.

மேலும், என்னுடைய உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். அக்காவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் எனக்கும் வேண்டாதவர்கள்.

துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இனிமேல் எனக்கும் எவ்வித ஒட்டுமில்லை உறவுமில்லை. எனக்கு கட்சியில் எந்த பதவியும் வேண்டாம். அக்காவின் தங்கையாக இருக்க விரும்புகிறேன் என்று அவர் அந்த மன்னிப்பு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தற்போது நடக்கும் அரசியல் சூழ்நிலையில், சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கும், ஆட்சியையும் கைப்பற்ற கபடநாடகம் போடுகிறார்.

மேலும், குடும்ப சொத்தாக மாற்ற நினைக்கும் சசிகலா, அமைச்சர்கள் தூண்டி விட்டு வருகிறார். ஜெயலலிதாவிற்கு அவர் துரோகம் செய்துவிட்டு எங்களை துரோகி என்று கூறுகிறார்.

சதி வேலை செய்யும் சசிகலா எங்களைப் பற்றி செயற்கையாக குற்றச்சாட்டுகளை சொன்னால் சில உண்மைகளை வெளியிட நேரிடும் என்று பன்னீர்செல்வம் எச்சரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com