இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு: பாதுகாப்புப் பணியில் 3,000 போலீஸார்: 850 காளைகள், 1,607 வீரர்களுக்கு அனுமதிச்சீட்டு

மதுரை மாவட்டம், பாலமேட்டில் வியாழக்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தென் மண்டல காவல் துறைத் தலைவர் தலைமையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

மதுரை மாவட்டம், பாலமேட்டில் வியாழக்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தென் மண்டல காவல் துறைத் தலைவர் தலைமையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இதில், பங்கேற்க 850 காளைகளுக்கும், 1,607 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
பாலமேட்டில் நீதிமன்றத் தடைக்கு முன்பு, ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டின்போது சுமார் 1 லட்சம் பேர் பார்வையாளர்களாக வந்துள்ளனர். இப்போது அனைத்துத் தரப்பினரும் ஆர்வமாக இருப்பதால், சுமார் 3 லட்சம் பேர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, தென்மண்டல காவல்துறை தலைவர் எஸ்.முருகன் தலைமையில், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள், 50-க்கும் மேற்பட்ட துணைக் கண்காணிப்பாளர்கள் உள்பட 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர்கள் சக்திவேல் (மதுரை பொறுப்பு), ராஜராஜன் (விருதுநகர்), மணிவண்ணன் (ராமநாதபுரம்), தர்மராஜ் (கன்னியாகுமரி) மற்றும் துணைக் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.
பாலமேடு பேருந்து நிலையம் வரை மட்டுமே வாகனங்களை அனுமதிப்பது எனவும், கடைத்தெரு, வாடிவாசல் பகுதிகளில் வாகனங்களுக்கு அனுமதிக் கிடையாது எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது. இதேபோல், வெள்ளிக்கிழமை நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கும் இதே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் எனவும், தேவைக்கு ஏற்ப கூடுதல் போலீஸாரை வரவழைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசுப் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும். அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பாலமேட்டுக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் புதன்கிழமை ஆய்வு செய்தார். மதுரை சரக டிஐஜி ஆனந்த்குமார் சோமானி, கண்காணிப்பாளர் (பொறுப்பு) சக்திவேல், கோட்டாட்சியர் ஜி.செந்தில்குமாரி ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com