சட்டவிரோத மது விற்பனை: தடுக்கக் கோரி பெண்கள் தர்னா

திண்டுக்கல் அருகே பொன்னிமாந்துறை ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதை தடுக்கக் கோரி, 100-க்கு மேற்பட்ட பெண்கள் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் அருகே பொன்னிமாந்துறை ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதை தடுக்கக் கோரி, 100-க்கு மேற்பட்ட பெண்கள் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
பொன்னிமாந்துறை ஊராட்சியில் சின்னபொன்னிமாந்துரை, புதுப்பட்டி, எம்ஜிஆர் நகர் உள்பட 8 கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சட்டவிரோதமாக வீதிக்கு வீதி மதுபான விற்பனை நடைபெறுவதாக, புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், இளைஞர்கள் மட்டுமின்றி பள்ளி செல்லும் மாணவர்களும் மதுபானம் குடிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கு மேற்பட்ட பெண்கள் அங்குள்ள கலையரங்கம் முன்பாக அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதிóயைச் சேர்ந்த அறிவழகன் கூறுகையில், இப்பகுதியில், 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை நடைபெறுகிறது. போலீஸாரிடம் புகார் அளித்தால், நடவடிக்கை எடுப்பதில்லை. விற்பனையை மேம்படுத்த, மது குடிப்பவர்களுக்கு முட்டை, ஊறுகாய், பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவற்றை இலவசமாக வழங்குகின்றனர் என்றார்.
அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி கூறுகையில், 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை நடைபெறுவதால் இளைஞர்கள் வேலைக்கு செல்வதில்லை. மதுபானம் வாங்குவதற்கு பணம் இல்லாவிட்டால் கடனுக்கு கொடுக்கிறார்கள். இதனால் பலர் வேலைக்குச் செல்வதில்லை. மேலும், பள்ளி மாணவர்கள் பலரும் மது குடிக்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பிட்ட இடம் என்றில்லாமல் வீதிகளில் அமர்ந்து மது அருந்துவதால், நடமாடுவதற்கு அச்சமாக உள்ளது என்றார்.
தர்னாவில் ஈடுபட்ட பெண்கள், காலி மது பாட்டில்களை அடுக்கி வைத்து, மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கோஷமிட்டனர்.
மதுக் கூடமான சுகாதார நிலையம்
பொன்னிமாத்துரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார நிலையம், முழுமையான செயல்பாட்டில் இல்லை. வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே செவிலியர்கள் வருவதால், அந்த பகுதி மது பிரியர்களுக்கு புகலிடமாக மாறிவிட்டது. சில்லரை விலை மது விற்பனையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, சுகாதார நிலையத்தையும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com