தொட்டப்பநாயக்கனூரில் ஜல்லிக்கட்டு: காளைகளை அடக்க முயன்ற 60 பேர் காயம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த தொட்டப்பநாயக்கனூரில் புதன்கிழமை நடந்த ஜல்லிக்கட்டில் 220-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன. காளைகளை அடக்க முயன்ற 60 பேர்
ஒரே நேரத்தில் பாய்ந்து வந்த இரண்டு காளைகளை அடக்க முயலும் வீரர்கள்.
ஒரே நேரத்தில் பாய்ந்து வந்த இரண்டு காளைகளை அடக்க முயலும் வீரர்கள்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த தொட்டப்பநாயக்கனூரில் புதன்கிழமை நடந்த ஜல்லிக்கட்டில் 220-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன. காளைகளை அடக்க முயன்ற 60 பேர் காயமடைந்தனர்.
உசிலம்பட்டி அருகே உள்ளது தொட்டப்பநாயக்கனூர். இங்குள்ள ஜக்கம்மா கோயில் சார்பாக ஜல்லிக்கட்டு விழா நடத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 2000-ஆம் ஆண்டுக்குப் பின்னர், இங்கு ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.
எனவே, 16 ஆண்டுகள் கழித்து தற்போது நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு விழாவையொட்டி, ஜக்கம்மா கோயிலுக்குச் சொந்தமான 6 காளைகள் புதன்கிழமை காலை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு, ஜமீன்தார் பாண்டியன் தலைமையில் காளைகளுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, மேளதாளத்துடன் ஊர்வலமாக வாடிவாசலுக்கு அழைத்துச் செல்லப்பட்டன. வாடிவாசலுக்கு பூஜை செய்த பின்னர், 6 காளைகளும் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதைத் தொடர்ந்து, மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 220-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகளை அடக்குவதற்கு 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதில், 100 பேர் அடங்கிய 3 குழுவாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழுவுக்கு 2 மணி நேரம் அனுமதி அளிக்கப்பட்டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு மிதிவண்டி, கட்டில், பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், காளைகள் முட்டியதில் 60 பேருக்கு காயம் ஏற்பட்டது. லேசான காயம் அடைந்தவர்களுக்கு, அங்கு முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். பலத்த காயமடைந்த 14 பேர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். கவலைக்கிடமான நிலையில் இருந்த ஒருவர், தேனி மாவட்டம் கா.விலக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com