வறட்சிப் பாதிப்பால் விவசாயிகள் இறப்பு: அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

தமிழகத்தில் வறட்சிப் பாதிப்பால் இறந்த விவசாயிகள் குறித்து தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் வறட்சிப் பாதிப்பால் இறந்த விவசாயிகள் குறித்து தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்து விட்டதால், வறட்சி நிவாரண நிதியாக ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் அறிவித்து இடைக்கால நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும், மாநில அரசுக்கு வறட்சி நிதியாக ரூ. 20 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாலகணேசன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
மேலும், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஏ. செல்வம், பி. கலையரசன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், தமிழகத்தில் இதுவரை வறட்சி பாதிப்பால் 17 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். வறட்சி நிவாரணப் பணிகளுக்காக ரூ. 20 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தினசரி செய்திகள் மற்றும் நாளிதழ்களில் வறட்சியால் உயிரிழக்கும் விவசாயிகள் குறித்து செய்திகள் வெளியாகின்றன. அவ்வாறு இருக்கையில், 17 பேர் என்பது குறைவான எண்ணிக்கையாக உள்ளதே என்றனர்.
அதையடுத்து, தமிழகத்தில் வறட்சிப் பாதிப்பால் இறந்த விவசாயிகள் குறித்து தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். அதேபோல், மாநில அரசு கோரியுள்ள நிவாரணத் தொகை தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் மாதம் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com