வி.கே.சசிகலா முதல்வராக பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: தனியார் ஹோட்டலில் தங்க வைப்பு

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, தமிழக முதல்வராக அந்தக் கட்சியைச் சேர்ந்த 125-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தாற்காலிக முதல்வராக உள்ள
வி.கே.சசிகலா முதல்வராக பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: தனியார் ஹோட்டலில் தங்க வைப்பு

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, தமிழக முதல்வராக அந்தக் கட்சியைச் சேர்ந்த 125-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தாற்காலிக முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அதிமுகவைச் சேர்ந்த 4 சட்டப் பேரவை உறுப்பினர்கள் பக்கபலமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
ஆனால், அவர்கள் யாருக்கு ஆதரவு என்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
தாற்காலிக முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், தனது ராஜிநாமா கடிதம் கட்டாயப்படுத்தி பெறப்பட்டதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை காலை கூடினர்.
இதற்கு முன்னதாக, போயஸ் தோட்ட இல்லத்துக்குச் சென்ற அமைச்சர்கள், மூத்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். காலை 10 மணியில் இருந்து அவர்கள் அனைவரும் கூடத் தொடங்கினர்.
இதே நேரத்தில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அணியைச் சேர்ந்தவர்கள் தனியாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இந்தச் சந்திப்பு ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் நடைபெற்றது.
சசிகலா பேச்சு-நிர்வாகிகளுடன் சந்திப்பு: காலை 11 மணிக்குள்ளாக அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.
காலை 11.30 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வந்தார். அங்கு கூடியிருந்தவர்களிடம் வணக்கம் தெரிவித்த அவர், நேராகச் சென்று கூடியிருந்த சட்டப் பேரவை உறுப்பினர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, அவர்கள் மத்தியில் வி.கே.சசிகலா உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவர் தனியாக ஆலோசனை நடத்தினார். ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழகம் திரும்பி ஆட்சி அமைக்க அழைப்பதில் தொடர்ந்து தாமதம் காட்டினால் என்ன செய்வது எனவும், அடுத்த கட்ட நடவடிக்கையை எப்படி மேற்கொள்வது எனவும் அவர் விவாதித்தார்.
இந்த விவாதத்தைத் தொடர்ந்து, அவர் நண்பகல் 12.56 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
மகாபலிபுரத்தில் எம்.எல்.ஏ.க்கள்: ஆலோசனைக் கூட்டங்களை முடித்த பிறகு, அதிமுகவைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் சொகுசு பேருந்தில் பயணமாகினர். அமைச்சர்கள் உள்பட 128 சட்டப் பேரவை உறுப்பினர்கள் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எண்ணிக்கை விளையாட்டு...
யார் எந்தப் பக்கம்...
சட்டப் பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 136.
அதில் ஜெயலலிதாவின் மறைவால் ஒரு இடம் காலியாகவுள்ளது.
இதையடுத்து மீதமுள்ள 135 பேரில், ஓ.பன்னீர்செல்வம், மாணிக்கம் (சோழவந்தான்), ஆறுக்குட்டி (கவுண்டம்பாளையம்), மனோரஞ்சிதம் (ஊத்தங்கரை), எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்) ஆகியோர் சசிகலா எதிர்ப்பு அணியாக உள்ளனர்.
இதனால், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 130- ஆக உள்ளது.
அதில், இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆறுமுகம் (கந்தர்வகோட்டை), கதிர்காமு (பெரியகுளம்) ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர். அவர்களிடம் பேசிய போது, சசிகலா முதல்வராக வர வேண்டும் என உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com