அதிமுகவில் நடைபெறும் மல்லுக்கட்டு பற்றி பேச விரும்பவில்லை: மு.க. ஸ்டாலின்

அதிமுகவில் நடைபெறும் மல்லுக்கட்டு பற்றி பேச விரும்பவில்லை என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
அதிமுகவில் நடைபெறும் மல்லுக்கட்டு பற்றி பேச விரும்பவில்லை: மு.க. ஸ்டாலின்

அதிமுகவில் நடைபெறும் மல்லுக்கட்டு பற்றி பேச விரும்பவில்லை என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுகவின் செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். வாடி வாசலில் இருந்து துள்ளி வரும் பலமிக்க காளைகளை, மிகுந்த திறனோடு தமிழகத்தின் கட்டிளம் காளையர்கள் தழுவி, தங்கள் வீரத்தை வெளிப்படுத்துவதை நேரில் பார்வையிட்டு, அவர்களை உற்சாகமூட்டினார். மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தங்கள் திறமையையும், தமிழகத்தின் வீரத்தையும் வெளிப்படுத்திய மாடு பிடி வீரர்களுக்கு ஏராளமான பரிசுகளை வழங்கி, அவர்களை வாழ்த்தி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
 
முன்னதாக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:
 
பதில்: ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்க நான் இங்கு வந்திருப்பதாக நீங்கள் யாரும் கருதிட வேண்டாம். தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்கள், மாணவர்கள், ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஒருங்கிணைந்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை தமிழகத்தில் நடத்திய காரணத்தால், இன்றைக்கு ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டிய ஒரு சூழ்நிலை வந்திருக்கிறது. ஆகவே, அலங்காநல்லூரில் நடைபெறக்கூடிய இந்த ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்வதன் மூலமாக தெரிவித்துக்கொள்ள விரும்புவது, இந்த ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு துணை நின்ற இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகளை, பாராட்டுகளை நன்றியுணர்வோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
 
கேள்வி: இதற்கு முன் எப்போதாவது ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கிறீர்களா?
 
பதில்: பல ஆண்டுகளுக்கு முன் இதே அலங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா ஒன்றில் கலந்துக் கொண்டிருக்கிறேன். அதுமட்டுமல்ல, கடந்த ஜனவரி 3ம் தேதி திமுகவின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறபோது, இந்த ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும், இந்த ஆண்டு நிச்சயம் நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, அப்படி நடைபெறுகின்ற போது நிச்சயமாக இந்த அலங்காநல்லூர் பகுதிக்கு நான் வருவேன், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என்று சொன்னேன். ஆக அந்த உறுதிமொழி இன்றைக்கு எந்தளவிற்கு நிறைவேற்றபடுகிறது என்று எண்ணிப் பார்க்கிறபோது நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன். அதற்காக துணை நின்ற இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
கேள்வி: ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெறுமா?
 
பதில்: ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெறும் என்ற சூழ்நிலை வரக்கூடிய நிலை இன்னும் அந்த முடிவுக்கு வராமல் இருக்கிறது. ஏனென்றால், அந்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே அதுவும் சரிசெய்யப்பட்டு, ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெறக்கூடிய சூழல் உருவாக வேண்டும். அதற்கு திமுக நிச்சயம் துணை நிற்கும்.
 
கேள்வி: ஆரம்பத்தில் பேசியபோது நான் வந்துதான் ஜல்லிக்கட்டை ஆரம்பித்து வைத்தேன் என்று யாரும் நினைக்க கூடாது என்று சொன்னீர்களே?
 
பதில்: இப்போதும் அதைத்தான் சொல்கிறேன். இதை அரசியல்ரீதியாக பார்க்கவில்லை. நான் அரசியல்வாதியாக இங்கு வரவில்லை. அரசியல் பண்ணுவதற்காகவும் வரவில்லை. தமிழகத்தின் இளைஞர்கள், மாணவர்கள் எந்த உணர்வோடு ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அதே உணர்வோடுதான் வந்திருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இது அதிமுகவிற்கும் திமுகவிற்கும் நடக்கக்கூடிய ஜல்லிக்கட்டு அல்ல. தமிழர்களின் கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டும், பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இந்த ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதில் திமுக  அதிகமான அளவிற்கு அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறது.
 
கேள்வி: அதிமுக-வில் நடக்கும் மல்லுக்கட்டை பற்றி?
 
பதில்: ஜல்லிக்கட்டு நடைபெறும் இந்த இடத்தில் அதிமுகவில் நடைபெறும் மல்லுக்கட்டு பற்றி நான் பேச விரும்பவில்லை.
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com