எம்எல்ஏக்கள் எங்கே? உயர் நீதிமன்ற கேள்விகளுக்கு அரசு வழக்குரைஞர் திடீர் பல்டி

தமிழக சட்டப்பேரவையின் அதிமுக உறுப்பினர்கள் எங்கே? என உயர் நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அரசு வழக்குரைஞர்
எம்எல்ஏக்கள் எங்கே? உயர் நீதிமன்ற கேள்விகளுக்கு அரசு வழக்குரைஞர் திடீர் பல்டி

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் அதிமுக உறுப்பினர்கள் எங்கே? என உயர் நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அரசு வழக்குரைஞர் நேற்று அளித்த பதிலிருந்து திடீர் பல்டி அடித்துள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருவரை மீட்டுத் தரக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி வாக்காளர் எம்.ஆர்.இளவரசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில்,  எங்கள் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.ராமசந்திரன், புதன்கிழமை (பிப்.8) சென்னையில் நடைபெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்தார். அந்த கூட்டத்துக்கு பின்னர், அவர் ஊருக்குத் திரும்பவில்லை.
அவரை சட்டவிரோதமாக, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள உள்ள விடுதியில் அடைத்து வைத்துள்ளதாக அறிகிறேன். அவர் மட்டுமில்லாமல், 130 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ.வான எஸ்.பி.சண்முகநாதன் தப்பி வந்துள்ளார். உறுப்பினர்களை அவர்களது குடும்பத்தினர் கூட பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூவாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ. எம்.கீதாவை மீட்டுத் தரக் கோரி, அவரது உறவினரான வி.ப்ரீத்தா என்பவரும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "வியாழக்கிழமை முதல் அவரைக் காணவில்லை.
அவரின் செல்லிடப்பேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர காவல் துறை ஆணையர், டிஜிபி மற்றும் கோடம்பாக்கம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன். எனவே, அவரை மீட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு, நீதிபதிகள் எம்.ஜெயசந்திரன், மதிவாணன் ஆகியோர் முன்பு வழக்குரைஞர் கே.பாலு கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
அப்போது ஆஜரான அரசு வழக்குரைஞர், "சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் எம்எல்ஏ.க்களுக்கான விடுதியில் பாதுகாப்பாக உள்ளனர்' எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், மதிவாணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்குரைஞரிடம் எம்எல்ஏக்கள் எங்கே இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு தராமல் சிறை வைக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் சுதந்திரமாக உள்ளதாக நேற்று கூறிய அரசு வழக்குரைஞர் இன்று திடீர் பல்டி அடித்துவிட்டு, சட்டமன்ற விடுதியில் எம்எல்ஏக்கள் இல்லை என்று கூறியுள்ளார். அரசு வழக்குரைஞர் அளித்த மாறுபட்ட தகவலை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள்,  
வழக்கில் தொடர்புடைய எம்எல்ஏக்கள் இருவரையும் சேர்த்து மற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து வரும் திங்கள்கிழமைக்குள் தமிழக டிஜிபி, மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் தமிழக அரசு, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com