ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு இல்லை

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு இல்லை

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் பெரும்பான்மையை நிரூபிக்க, திமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியிருந்தார்.
இதை மறுத்து மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியமைக்க திமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியது திமுகவுக்கு உடன்பாடு இல்லாதது.
இந்த சூழ்நிலையில் திமுக எடுக்க வேண்டிய நிலை குறித்து கட்சியின் தலைவர், பொதுச் செயலர் ஆகியோர் தான் உரிய நேரத்தில் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார்கள்.
அதற்கிடையில், திமுக நிர்வாகிகள் யாரும் தனிப்பட்ட முறையில் இதுபோன்ற கருத்துகள் எதையும் வெளியிடக் கூடாது என்றார் ஸ்டாலின்.
பேரவையில் சுதந்திரமான வாக்கெடுப்பு அவசியம்: காபந்து முதல்வராக நீடிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தன்னிடம் கட்டாயப்படுத்தி அதிமுக தலைமை ராஜிநாமா கடிதம் வாங்கியதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தற்போது எந்தத் தலைமையின் கீழ் இருக்கின்றனர் என உறுதி செய்யப்படாத நிலை உள்ளது. அதிமுகவின் எம்எல்ஏக்களைச் சொகுசு பேருந்துகளில் ஏற்றிச் சென்று, நட்சத்திர விடுதிகளில் தங்க வைத்துள்ளனர்.
ஜனநாயக நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் பிணைக் கைதிகள் போல சிறைப்படுத்தப்பட்டிருப்பது மக்களாட்சியின் மாண்பைச் சிதைக்கும் செயலாக இருக்கிறது.
ஆளுங்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாத நிலை உள்ளது.
இந்தச் சூழலில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் மாநிலத்தில் நிலையான, சுதந்திரமான சட்டப்பூர்வமான வழியிலான ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் இருக்கிறார். மக்களின் பிரதிநிதிகளான சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டத்துக்குப் புறம்பான நிர்பந்தங்களாலும் மிரட்டல்களாலும் ஏதேனும் ஒரு பக்கத்துக்குச் செல்கிறார்களா, இதற்கான பலன்கள் - வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.
எனவே, ஆளுநர் அரசியல் சட்டம் மற்றும் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் வழிகாட்டுதல் அடிப்படையிலும் உரிய முடிவுகளை எடுத்து சுதந்திரமான சட்டப்பேரவை வாக்கெடுப்பை உறுதி செய்து, ஜனநாயக மாண்புகளைக் காத்திட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com