சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கப்போவது எப்படி?

பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க சட்டப்பேரவையில் நடைபெறும் வாக்கெடுப்பு குறித்து பல தரப்பில் இருந்தும் பல விதமாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கப்போவது எப்படி?

சென்னை: பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க சட்டப்பேரவையில் நடைபெறும் வாக்கெடுப்பு குறித்து பல தரப்பில் இருந்தும் பல விதமாக கூறப்பட்டு வந்தாலும் கூவத்தூரில் கூத்தடித்துக்கொண்டிருக்கும் மக்கள் பிரதிகள் தானே பன்னீர்செல்வமா, சசிகலா என்று முடிவு செய்யவேண்டும்.

கடந்த இருதினங்களுக்கு முன் அதிமுக பொதுச் செயலாளரான வி.கே.சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பன்னீர் செல்வம், கட்டாயத்தின் பேரில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததாக கூறியிருந்தார். அவரின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்வதாகக் கூறிய ஆளுநர் வித்யாசாகர் ராவ், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை முதல்வர் பதவியில் நீடிக்குமாறு அவரைக் கேட்டுகொண்டார்.

இந்தச் சூழ்நிலையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் உடன் சென்றனர்

அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா வியாழக்கிழமை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து தமிழகத்தில் ஆட்சியமைக்கும் உரிமை கோரினார்.

இதையடுத்து ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பது குறித்து சட்ட விதிகளுக்கு உட்பட்டே முடிவுகளை ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடுக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து ஆளுநர் தான் எடுக்கும் முடிவின்படி முதலில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அனுமதித்தால், அதற்காக பேரவையை கூட்டுவதற்கு ஆளுநர் உத்தரவிடுவார். பேரவைக் கூட்டத்தில் முதல்வர் உறுப்பினர்களின் ஆதரவு கோரி உரையாற்றுவார். அப்போது அவையை சபாநாயகர் தனபால் தான் நடுநிலையோடு நடத்துவார்.

அவர் ஆற்றிய உரை நிறைவு பெற்றதும், வாக்கெடுப்புக்காக சபாநாயகர் உத்தரவிடுவார். இதையடுத்து பேரவையை 6 பிரிவுகளாக பிரிக்கப்படும். அதன்படி முதல் பிரிவினர் யாரெல்லாம் முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறீர்கள்? என்று கேட்பார். அவரை ஆதரிக்கும் உறுப்பினர்கள் எல்லாம் அப்போது எழுந்திருக்க வேண்டும். அப்போது அவர்களின் பெயர்களை பேரவை செயலாளர் குறித்துக்கொண்டு அதை சத்தமாக வாசிப்பார். அதன்பிறகு அந்த உறுப்பினர்கள் அமர்ந்து கொள்ளவேண்டும்.

அதன்பிறகு முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உறுப்பினர்கள் யார்? என்று சபாநாயகர் கேட்பார். அப்போது, அந்த பிரிவில் உள்ள எதிர்ப்பு தெரிவிக்கும் உறுப்பிஎனர்கள் எழுந்து நிற்பார்கள். பேரவை செயலாளர் அந்த பெயர்களை குறித்துக்கொண்டு, அதை சத்தமாக வாசிப்பார். அதன்பிறகு அந்த உறுப்பினர்கள் அமர்ந்து கொள்ள வேண்டும்.

இதையடுத்து நடுநிலை வகிக்கும் உறுப்பினர்களை எழுந்து நிற்குமாறு சபாநாயகர் உத்தரவிடுவார். நடுநிலை வகிப்பவர்கள் எழுந்து நிற்பார்கள். அவர்களின் பெயர்களை பேரவை செயலாளர் குறித்துக்கொண்டு வாசிப்பார். இதையடுத்து அனைத்து பிரிவுகளிலும் பதிவான உறுப்பினர்களின் வாக்கு கணக்கிடப்படும்.

பின்னர், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு எத்தனை பேர்? எதிர்ப்பு எத்தனை பேர்? என்பது கணக்கிடப்பட்டு அவருடைய பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதா? என்பதை சபாநாயகர் அறிவிப்பார்.

ஒருவேளை சசிகலாவை முதலாவதாக அழைத்து பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு கேட்டுக்கொள்ள முடிவு செய்தால் அதற்கு முன்பு, சசிகலாவுக்கு முதல்வராக ஆளுநர் பதவி பிரமாணம் செய்துவைப்பார். அதன்பிறகு பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுவார்.
அதனைத்தொடர்ந்து மேற்கண்ட முறையிலே வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்த வாக்கெடுப்பில் சபாநாயகர் நடுநிலைதான் வகிக்கவேண்டும். ஆனால், ஒருவேளை ஒரு பிரிவுக்கு ஆதரவு கிடைப்பதற்கு ஒரு உறுப்பினர் கூடுதலாக தேவைப்படும்போது மட்டும் சபாநாயகர் தனது கையை உயர்த்தி தனது ஆதரவு யாருக்கு? என்பதை வெளிப்படுத்தலாம்.

தமிழகத்தில் நிலவி வரும் சூழ்நிலைகளை வைத்து பார்க்கும் போதும், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சசிகலா முதல்வராக பதவியேற்பு நிகழ்ச்சிக்காக சென்னை பல்கலை நூற்றாண்டு விழா மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வந்தது.

இந்தநிலையில், பதவியேற்பு தொடர்பாக ஆளுநர் மாளிகையிலிருந்து எந்த அழைப்பும் வரவில்லை என பல்கலை., நூற்றாண்டு மண்டபத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது முதல்வர் பன்னீர்செல்வத்திற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது.

எது எப்படியோ, தற்போது 233 பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில், அதிமுகவுக்கு 134 பேர் உள்ளனர். நியமன உறுப்பினர் ஒருவர் என 135 பேர் உள்ளனர். இவர்களில் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு 5 பேரவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மீதி 129 பேர் சசிகலா அணியில் உள்ளனர்.

இந்நிலையில், ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க உத்தரவிட்டாலும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். பெரும்பான்மையை நிரூக்க 118 பேரவை உறுப்பினர்களின் ஆதரவு அளிக்க வேண்டும் என்பது உண்மை நிலை.

முதல்வர் யார்: ஜெயலவிதா நம்பிக்கை வைத்து 3 முறை முதல்வர் பதவி அளித்து அடையாளம் காட்டப்பட்ட பன்னீர்செல்வமா, ஜெயலலிதாவால் துரத்தப்பட்டு மீண்டும் மன்னித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட சசிகலாவா என்பதை முடிவு செய்ய வேண்டிவர்கள் கூவத்தூரில் கூத்தடித்துக்கொண்டிருக்கும் மக்கள் பிரதிகள் தானே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com