போராட்ட அச்சுறுத்தல் எதிரொலி: மெரீனாவில் போலீஸார் குவிப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் மீண்டும் போராட்டம் நடைபெறப்போவதாக வெளியான தகவலையடுத்து, அங்கு பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மெரீனா கடற்கரையில் மீண்டும் போராட்டம் நடைபெறப்போவதாக வெளியான தகவலையடுத்து, அங்கு பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல லட்சம் பேர் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது. அப்போது, சென்னையின் ல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.
அதன் பின்னரும், மெரீனா கடற்கரையில் போராட்டம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக காவல் துறை கருதியதால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே நிலைமை கட்டுக்குள் இருந்ததால், இந்த தடை உத்தரவு கடந்த 4 -ஆம் தேதி திரும்பப் பெறப்பட்டது.
இந்த நிலையில், அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் காரணமாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி உருவாகியுள்ளது. இதில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் மெரீனாவில் புதன்கிழமை நள்ளிரவு முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மெரீனா கடற்கரை முழுவதும் 24 மணி நேரமும் ரோந்து பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்துக்குரிய இளைஞர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். நிலைமை சீராகும் வரை மெரீனா கடற்கரையில் போலீஸாரின் இந்த கெடுபிடிகள் நீடிக்கும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com