மாணவர்களுக்கு காய்ச்சல் எதிரொலி: சைனிக் பள்ளிக்கு 10 நாள்கள் விடுமுறை அறிவிப்பு

மாணவர்கள் காய்ச்சல் காரணமாக, உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளிக்கு 10 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி நகரில் உள்ள ராணுவப் பள்ளி

மாணவர்கள் காய்ச்சல் காரணமாக, உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளிக்கு 10 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி நகரில் உள்ள ராணுவப் பள்ளி எனும் சைனிக் பள்ளியில் 700 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி மாணவர்கள் 26 பேருக்கு பிப்ரவரி 7-ஆம் தேதி திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு உடுமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி மருத்துவமனைக்குச் சென்று மாணவர்களைச் சந்தித்து புதன்கிழமை உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர், பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினார். இந்நிலையில், பள்ளிக்கு 10 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 26 மாணவர்களில் 7 பேர் வீடு திரும்பி விட்டனர். தற்போது 19 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவக் குழுவின் அறிவுறுத்தலின்படி பள்ளிக்கு 10 நாள்கள் (10-2-17 முதல் 19-2-17) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தங்களது மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனுக்காகவும், அவர்களது மருத்துவ சிகிச்சைகளுக்காகவும் இந்த விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com