அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சீறிப் பாய்ந்தன 549 காளைகள்

உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூரில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் 549 காளைகள் சீறிப் பாய்ந்தன. அவற்றை அடக்க முயன்ற வீரர்கள் மற்றும்
மதுரை அலங்காநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அடக்க முயலும் காளையரும், அடங்க மறுக்கும் காளைகளும்.
மதுரை அலங்காநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அடக்க முயலும் காளையரும், அடங்க மறுக்கும் காளைகளும்.

உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூரில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் 549 காளைகள் சீறிப் பாய்ந்தன. அவற்றை அடக்க முயன்ற வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மொத்தம் 73 பேருக்கு காயம் ஏற்பட்டது.
தமிழகத்தில் தைப் பொங்கலை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற தடையால் நடைபெறவில்லை. தமிழக அரசு இயற்றிய சட்டத்தின் மூலம் இப்போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
அலங்காநல்லூரில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. காளைகள், பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் என அனைவரும் பல கட்ட சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். வாடி வாசல் முன்பு மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ், தென்மண்டல காவல்துறை தலைவர் முருகன், டி.ஐ.ஜி சோமானி காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சக்திவேல் உள்ளிட்டோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முதலில் காளியம்மன், முனியாண்டி கோயில் காளைகளுடன், வலசை உள்ளிட்ட 5 காளைகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு, வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை யாரும் பிடிக்கவில்லை.
ஜல்லிக்கட்டுக்காக மதுரை மட்டுமல்லாது, வெளியூர்களிலிருந்தும் 950 காளைகளும், 1492 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். வீரர்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 150 பேர் வீதம் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு காளையும் அவிழ்த்துவிடப்படும்போது, அதற்குரிய பரிசுகள், அதை அடக்கும் வீரர்களுக்குரிய பரிசுகளும் அறிவிக்கப்பட்டன. தும்பைபட்டி, சிவகங்கை, வலசை, அரிட்டாபட்டி, பனங்குடி, கரூர், நத்தம் உள்ளிட்ட பல ஊர்க்காளைகள் நின்று விளையாடின. நத்தம் ரேணுகா உள்ளிட்ட இரு பெண்கள் நேரடியாக தங்களது வளர்ப்பு ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வந்து பரிசுகள் பெற்றுச் சென்றனர்.
ஒவ்வொரு மணி நேரத்திலும் வந்த வீரர்களுக்கு பச்சை, மஞ்சள், ஊதா, ரோஜா, தாமரை நிறங்களில் பனியன்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டுக்காக முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள், செய்தியாளர்கள் என பல பிரிவு கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டைக் காண மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஆரி, இயக்குநர்கள் அமீர், கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 549 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இடையிடையே காளைகள் திரும்பி வந்ததாலும், வீரர்கள், காளைகள் காயமடைந்ததாலும், ஒவ்வொரு மணி நேர சுற்றுக்காகவும் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது. கார், புல்லட், சைக்கிள், கட்டில், பீரோ, தொலைக்காட்சி, தங்க, வெள்ளிக் காசுகள், ரொக்கப்பணம் என ஏராளமான பரிசுகள் அளிக்கப்பட்டதால் வீரர்கள் உற்சாகத்துடன் காளையை அடக்கினர். இதனால் அவ்வப்போது பலரும் காயமடைந்தனர். சிறப்பாக காளையை அடக்கியதாக பனைங்காடி வினோத்ராஜ், கோரிப்பாளையம் மணிகண்ட பிரபு, மச்சம்பட்டி தர்மராஜ், மேலூர் சரத்குமார் ஆகியோருக்கு புல்லட் வாகனங்களும், சான்றிதழும் அளிக்கப்பட்டன. இலங்கை அமைச்சர் தொண்டைமான் காளை சிறந்ததாக தேர்வாகி கார் பரிசளிக்கப்பட்டது. அதனுடன் சிறந்த காளைகளாக ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி. ராஜசேகர், ஆனையூர், சாம்பிராணிபட்டி கோயில் காளைகள், மேலூர் லட்சுமி, அவனியாபுரம் சுப்ரீம் மொபைல், மாங்குளம் ஆகிய காளைகள் சிறந்த காளைக்குரிய பரிசுகளையும் பெற்றன.
வீரர்கள் காயம்: ஜல்லிக்கட்டில் 73 பேர் காயமடைந்தனர். இதில் 32 பேர் மாடு பிடி வீரர்கள். அதில் 9 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பார்வையாளர்களில் 41 பேர் காயமடைந்து, 14 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டுக்கு மதுரை மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வெளிநாட்டவர் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

மேடையில் மத்திய அமைச்சர் - ஸ்டாலின்
மதுரை அலங்காநல்லூரில் வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்ற போது, மேடையில் இருந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு வந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் மேடையில் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நீண்ட நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்ததால், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இதுபற்றி மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ஸ்டாலின் எனக்கு சகோதரர் போன்றவர். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டோம். அரசியல் ரீதியாக எதையும் பேசவில்லை என்றார்.
முன்னதாக பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற சட்டரீதியான பாதுகாப்புக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com