கலிங்கப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 147 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், கலிங்கப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு ஊர்களிலிருந்து 147 காளைகள் பங்கேற்றன.
கலிங்கப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 147 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், கலிங்கப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு ஊர்களிலிருந்து 147 காளைகள் பங்கேற்றன.
பொங்கல் பண்டிகையொட்டி, கலிங்கப்பட்டியில் ஆண்டுதோறும் மாரியம்மன் கோயில் முன் உள்ள திடலில் வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம்.
உச்ச நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக, கடந்த 4 ஆண்டுகளாக இங்கு
ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.
மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, தமிழக அரச ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் நிறைவேற்றி, அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
கலிங்கப்பட்டியில் பிப்ரவரி 10ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது. இதைத் தொடர்ந்து, விழாக் குழுவினர் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
ஜல்லிக்கட்டுக்காக ஸ்ரீ மாரியம்மன் கோயில் திடலில், வாடிவாசல் அமைக்கப்பட்டு அரசின் வழிகாட்டுதல்படி, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, அரியலூர், சேலம், சிவகங்கை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க 158 காளைகளுக்கு உரிமையாளர்கள் பதிவு செய்தனர். மருத்துவப் பரிசோதனையில் 11 காளைகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, 147 காளைகள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.
இதுபோல, காளையை அடக்கும் வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, 175 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. விதிகளை பின்பற்றாத 10 வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.
வாடிவாசல் வழியாக காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் வீரர்களுக்கு பிடிகொடுக்காமல் செல்ல, பல காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் விளையாடியன.. சீறிப் பாய்ந்து காளைகளை வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு விழாக் குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார் ஆகியோர் விதிமுறைகளின்டி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதா என்பதை பார்வையிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், நகரப்பட்டியைச் சேர்ந்த காளை ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்து விளையாடியது. இதை பாராட்டி காளையின் உரிமையாளருக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி ரூ. 1000 பரிசு வழங்கினார். காளைகளை அடக்க முயன்ற 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மருத்துவர் ராஜேந்திரன், துணை இயக்குநர் முருகேசன், உதவி இயக்குநர்கள் துரைசாமி,ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் கால்நடைகளைப் பரிசோதித்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கினர்.
ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் ஏ.ஜி.ராஜராஜன், மணப்பாறை வட்டாட்சியர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com