களம் காணத் தயாராகும் இரு அணியினர்

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவை, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆட்சி அமைக்க அழைக்காத நிலையில், சட்டப் பேரவையில் பலப்பரீட்சை நடத்த வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள்
களம் காணத் தயாராகும் இரு அணியினர்

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவை, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆட்சி அமைக்க அழைக்காத நிலையில், சட்டப் பேரவையில் பலப்பரீட்சை நடத்த வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எந்த அணியாக இருந்தாலும் பெரும்பான்மையை நிரூபிக்க கொறடா உத்தரவு என்பது பெரும் துருப்புச் சீட்டாகச் செயல்பட உள்ளது.
நிரூபிப்பது எப்படி?: பெரும்பான்மையை நிரூபிக்கும் போது, சட்டப் பேரவையில் பிரிவு வாரியாக உறுப்பினர்கள் எழுந்து நிற்பர். இதற்கு முன்னதாக, கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படும். உதாரணத்துக்கு, வி.கே.சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருந்தால் கட்சியின் கொறடா, அவரது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு உத்தரவு பிறப்பிப்பார்.
அதாவது பெரும்பான்மைக்கான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனக் கூறி உத்தரவு பிறப்பிக்கலாம். இது சட்டப் பேரவையில் பேரவைத் தலைவரின் முன்பாகவே நடைபெறும். இவ்வாறு கொறடா உத்தரவு பிறப்பிக்க, அவரை கட்சியின் பொதுச் செயலாளர் அறிவுறுத்த வேண்டும்.
பொதுச் செயலாளர் பதவிக்கு குறி: கொறடா உத்தரவைப் பிறப்பிக்க பொதுச் செயலாளருக்கே அதிகாரம் என்பதால், அந்தப் பதவியை ஓ.பன்னீர்செல்வம் அணி குறி வைத்து காய் நகர்த்தி வருகிறது. தங்களுக்குப் போதிய பெரும்பான்மை பலம் இருப்பதால் சட்டப் பேரவையில் அதனை நிரூபிக்க வேண்டிய தேவையில்லை என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தரப்பு கருதுகிறது.
பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், கட்சியின் பொதுச் செயலாளர் பதவி என்பது முக்கியமானதாகி விடும். இதனாலேயே, சசிகலாவின் தாற்காலிக பொதுச் செயலாளர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என ஓ.பி.எஸ். அணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கும் மனு அனுப்பியுள்ளார் மதுசூதனன்.
தனி அணிக்கு வாய்ப்பா? கடந்த 2003-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இருந்தால்தான் அவர்கள் தனி அணியாகவோ அல்லது வேறொரு கட்சியுடன் இணைந்தோ செயல்பட முடியும். இப்படி இரண்டு பங்கு உறுப்பினர்கள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டாலோ, முக்கியத் தீர்மானங்களில் வாக்களித்தாலோ மட்டும்தான் அவர் கட்சித் தாவல் சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்யப்படுவார். இதற்கான வாய்ப்பு ஓ.பி.எஸ். அணிக்கு இப்போதைக்கு இல்லை.
இதனாலேயே அவர்கள் பேரவைத் தீர்மானத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேரவையில் நம்பிக்கைத் தீர்மானத்தின் போது, கொறடா உத்தரவை மீறி எந்த உறுப்பினராவது செயல்பட்டால் அவரை அந்த நிமிஷத்தில் இருந்தே தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் பேரவைத் தலைவருக்கு உண்டு. இதனாலேயே கொறடா உத்தரவும், அந்த உத்தரவை அவருக்கு பிறப்பிக்க உரிமையுள்ள கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பையும் ஓ.பி.எஸ். அணி மிக முக்கியமானதாகக் கருதுகிறது.
இதனை மையப்படுத்தித்தான் ஓ.பி.எஸ். அணியில் உள்ள மதுசூதனன், பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதனாலேயே எண்ணிக்கைக் கணக்குகளை விடுத்து இப்போது கட்சிப் பொறுப்புகளை முன்வைத்து காய் நகர்த்தி வருகிறது ஓ.பி.எஸ். தரப்பு.
அதேசமயம், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் ஆட்சி அமைக்கக் கோரும் உரிமையைத் தர மறுக்கிறார் என அதிமுக தரப்பு கடும் அழுத்தங்களை தில்லிக்குத் தரும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com