சம்பாவில் மகசூல் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

மோட்டார் பம்ப்செட் மூலம் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிரிலும் மகசூல் மிகவும் குறைவாகக் கிடைப்பதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே பொட்டுவாசாவடி பகுதியில் அண்மையில்  இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்ட நெல் அறுவடை.
தஞ்சாவூர் அருகே பொட்டுவாசாவடி பகுதியில் அண்மையில் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்ட நெல் அறுவடை.

மோட்டார் பம்ப்செட் மூலம் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிரிலும் மகசூல் மிகவும் குறைவாகக் கிடைப்பதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், சம்பா பருவத்தில் நெல் சாகுபடியின் இயல்பான பரப்பளவு 1.06 லட்சம் ஹெக்டேர். ஆனால், நிகழ் சம்பா பருவத்தில் காவிரியில் தண்ணீர் வரத்து இல்லாததாலும், பருவமழை பொய்த்து போனதாலும் ஏறத்தாழ 81,000 ஹெக்டேரில் மட்டுமே நெல் பயிரிடப்பட்டது. கிட்டத்தட்ட 25,000 ஹெக்டேர் குறைவாகவே சாகுபடி செய்யப்பட்டது.
நிலத்தடி நீர் ஆதாரமும், மோட்டார் பம்ப்செட் வசதியும் உள்ள நிலங்களில் மட்டுமே பயிர்கள் தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளன. மாவட்டத்தில் இதுவரை ஏறத்தாழ 17,000 ஹெக்டேரில் சம்பா அறுவடை நிறைவடைந்துள்ளது. இனிமேல், அதிகபட்சமாக சுமார் 15,000 ஹெக்டேரில் மட்டுமே அறுவடை செய்ய இயலும் என வேளாண்மைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மற்ற பயிர்கள் அனைத்தும் காய்ந்து கருகிவிட்டன.
இதுவரை அறுவடை செய்யப்பட்ட சம்பா பயிர்களிலும் மகசூல் குறைவாகவே கிடைக்கிறது. மாவட்டத்தில் ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 5 டன்கள் (5,000 கிலோ) வரை மகசூல் கிடைக்கிறது. ஆனால், இந்த மகசூல் மிகச் சில இடங்களில் மட்டுமே பெற முடிகிறது. குறைந்தபட்ச மகசூல் அளவு என்பது பூஜ்யம் என்ற அளவில்தான் இருக்கிறது. எனவே, மாவட்டத்தில் நிகழாண்டு சராசரி மகசூல் அளவு 700 கிலோ (0.7 டன்) என்ற அளவில் உள்ளது. கடந்த ஆண்டுகளில் சராசரி மகசூல் அளவு 6 முதல் 8 டன்கள் வரை இருந்தது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாரன் தெரிவித்தது:
பம்ப்செட் மூலம் சாகுபடி செய்தால் ஏக்கருக்கு ஏறத்தாழ 45 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு பனிப்பொழிவு கடுமையாக இருந்ததால் கருப்பு நெல் அதிகமாக உள்ளது. எனவே, ஏக்கருக்கு 10 மூட்டைகள்தான் மகசூல் கிடைத்துள்ளது என்றார் அவர்.
ஆற்றில் தண்ணீர் வராததால், மிகுந்த செலவு செய்து, ஆயில் மோட்டார் வைத்து நீர் இறைத்து சாகுபடி செய்தும் மகசூல் கிடைக்கவில்லை. எனவே, செய்த செலவை ஈடுகட்ட முடியாத நிலை இருப்பதால், கூலி கொடுப்பதுகூட சிரமமாக இருக்கிறது. இதனால், வாங்கிய கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்பது தெரியவில்லை என்றார் பொட்டுவாசாவடியைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம்.
ஒருபுறம் மகசூல் வீழ்ச்சி என்றாலும், மறுபுறம் வியாபாரிகள் போட்டி போட்டு விவசாயிகளின் வயலுக்கே சென்று நெல்லை வாங்குகின்றனர். எனவே, நிகழாண்டு ஆந்திரா பொன்னி (பிபிடி 5204) ரக நெல் 60 கிலோ மூட்டை ரூ. 1,300 முதல் ரூ. 1,400 வீதம் வரை விலை போகிறது. கடந்த ஆண்டு இக்காலகட்டத்தில் ரூ. 1,000, ரூ, 900 என்ற அளவில்தான் விற்கப்பட்டது.
வழக்கமாக, ஆந்திரா பொன்னி ரக நெல்லை மட்டுமே வியாபாரிகள் முன்வந்து வாங்கிச் செல்வர். பொது ரகமான சி.ஆர். 1009 நெல்லை வாங்குவதற்கு ஆள் இருக்காது. ஆனால், நிகழாண்டு சி.ஆர். 1009 நெல் ரக்தையும் வியாபாரிகள் வாங்க முன்வருகின்றனர். 60 கிலோ மூட்டை ரூ. 1,050 - 1,200 வீதம் வரை விலை போவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், கிடைக்கும் மகசூல் வீட்டுப் பயன்பாட்டுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறதே தவிர, விற்பனை செய்யும் அளவுக்கு இல்லை என்றனர் விவசாயிகள். எனவே, நிகழாண்டு சாகுபடி செய்தும் லாப ஈட்ட முடியதா நிலையில் உள்ளனர் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com