ஓபிஎஸ் அணியில் பாண்டியராஜன், சி.பொன்னையன்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் ஆகியோர் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் ஆகியோர் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர மக்களவை உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்), அசோக்குமார் (கிருஷ்ணகிரி), சத்தியபாமா(திருப்பூர்), வனரோஜா (திருவண்ணாமலை) ஆகிய 4 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிவருகிறது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் ஆதரவு தமக்கு உள்ளதாக பன்னீர்செல்வம் தெரிவித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் தனி அணியை உருவாக்கியபோது, அவரை அதிமுகவின் துரோகி எனவும் பாண்டியராஜன் குறிப்பிட்டார்.
சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரைச் சந்தித்தபோது, பாண்டியராஜனும் உடன் சென்றிருந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை திடீரென முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்து அவருக்கு பாண்டியராஜன் ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
திமுகவுக்கு ஏமாற்றமே...அதிமுகவுக்கு வந்து 3 ஆண்டுகள் 6 மாதங்கள் ஆகின்றன. அதிமுக எனும் எஃகு கோட்டை ஒன்றாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையை எடுத்துள்ளேன். சசிகலாவின் பக்கம் இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஒவ்வொருவராக இங்கு வந்துவிடுவர்.
அதிமுகவினருக்குள் பிளவு ஏற்பட்டு விடும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் திமுகவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்.
எனக்கு வாக்களித்த பொது மக்களின் கருத்தைக் கேட்டு, இங்கு வந்தேன். மக்களின் ஏகோபித்த ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் உள்ளது. அவரை ஆதரிக்காவிட்டால், நான் தொகுதிக்குள்ளேயே போக முடியாது என்ற நிலை உள்ளது. அதனால் வந்தேன்.
ஆளுநர் நடுநிலையோடு செயல்படுவார் என்பதில் எங்களுக்குச் சந்தேகமும் இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 164-ஆவது பிரிவின்படி ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தால் மட்டுமே முதல்வராக முடியும். அதையும் மீறி முதல்வரானாலும், அடுத்த 6 மாதத்தில் தேர்தலைச் சந்தித்து, மக்கள் செல்வாக்குடன் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும்.
ஆனால், மக்களின் ஆதரவு சசிகலாவுக்கு இல்லை. இது ஆளுநருக்கும் தெரியும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவர் நல்ல முடிவு எடுப்பார் என்றார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, கட்சியும்-ஆட்சியும் ஒரு குடும்பத்தின் சொத்தாகிவிடக் கூடாது என்பதற்காக பாண்டியராஜன் இங்கு வந்துள்ளார். இன்னும் பலர் இங்கு வருவர் என்பதற்கான அச்சாரமாக அவர் வருகை அமைந்துள்ளது. விரைவில் அனைவரும் ஆதரவு தெரிவிப்பர் என்றார்.
சி.பொன்னையன் ஆதரவு: சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்களில் அதிமுகவின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையனும் ஒருவர். அவரும் சனிக்கிழமை திடீரென முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சொந்த தாய்க்கு நோய் ஏற்பட்டதைப் போல கருதி அவர் உடல்நலம்பெற ஒன்றரை கோடி அதிமுகவின் தொண்டர்கள் இடைவிடாமல் பிரார்த்தனை செய்து வந்தனர். அப்போது, நானும் அப்பல்லோ சென்று அவர்கள் தரும் தகவல்களைச் செய்தியாளர்களிடம் தெரிவித்தேன். ஆனால், மருத்துவமனையில் ஜெயலலிதாவைச் சந்திக்க யாரையும் சசிகலா அனுமதிக்கவில்லை.
அதிமுகவின் சட்டப்படி 1.64 கோடி தொண்டர்கள் யார் பொதுச்செயலாளராக வேண்டும் என்று முடிவு செய்கிறார்களோ அவர்களே வர முடியும். வேறு யாரும் பொதுச்செயலாளராக வர முடியாது.
அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் மக்களின் வேண்டுகோளை ஏற்றுச் செயல்பட வேண்டும். முதல்வர் பன்னீர்செல்வம் சிறப்பான ஆட்சி புரிந்து வருகிறார். அவரே தொடர்ந்து முதல்வராக நீடிக்க வேண்டும் என்றார்.
பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலில் 2 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். தற்போது, அந்த எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. மாஃபா பாண்டியராஜன், ஆறுகுட்டி, மனோரஞ்சிதம், மாணிக்கம், எஸ்.பி.சண்முகநாதன், மனோகரன் ஆகிய 6 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்): முதல்வர் பன்னீர்செல்வம் எடுத்துள்ள முடிவு துணிச்சலானது, அதை நான் வரவேற்கிறேன். தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்நாட்டை வழி நடத்தும் தகுதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு உண்டு.
மக்களவை உறுப்பினர் அசோக்குமார்(கிருஷ்ணகிரி):
சசிகலாவிடம் தொண்டர்கள் இல்லாத தலைமை இருக்கிறது.
தொண்டர்களின் ஆதரவுடன் உள்ள தலைமை ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்வர் பணியை ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக செய்து வருகிறார். அவரிடம் எவ்விதமான குறையும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com