ஓரளவுக்கே பொறுமை காப்போம்!

ஓரளவுக்கே பொறுமை காக்க முடியும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், கட்சியின் பேரவை குழுத் தலைவருமான வி.கே.சசிகலா தெரிவித்தார்.
கூவத்தூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வி.கே. சசிகலாவை வரவேற்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.
கூவத்தூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வி.கே. சசிகலாவை வரவேற்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.

ஓரளவுக்கே பொறுமை காக்க முடியும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், கட்சியின் பேரவை குழுத் தலைவருமான வி.கே.சசிகலா தெரிவித்தார்.
போயஸ் தோட்ட இல்லத்தில் கட்சியினரிடையே அவர் சனிக்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியது:- ஒன்றரை கோடி தொண்டர்களை ஜெயலலிதா என்னிடம் விட்டுச் சென்றுள்ளார்.
இந்தக் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது.
ஆட்சியையும், கட்சியையும் நான் பத்திரமாக காப்பாற்றுவேன் என்றுதான் ஜெயலலிதா உறுதியாக நினைத்துச் சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு அதிமுகவை பல சோதனைகளைத் தாண்டி ஜெயலலிதா கட்டிக் காத்தார். அதனுடைய பலன் இன்று இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சி அதிமுகதான் என்ற பெருமையை தேடித் தந்துள்ளார்.
ஒன்றரை கோடி தொண்டர்கள் நம்மிடம் இருக்கும் வரை நம்மைப் பிரித்து ஆள நினைக்கும் எவராக இருந்தாலும் தோற்றுப் போவார்கள்.
நமது இயக்கம் ஜெயலலிதா சொன்னது போன்று ஒரு எஃகு கோட்டை. இந்தக் கோட்டையை யாராலும் அசைக்க முடியாது.
ஜெயலலிதாவும் நிறைய போராட்டங்களை சந்தித்துத்தான் இந்தக் கட்சியை நடத்தி வந்தார். நமக்கும் அத்தகைய சோதனை வந்திருக்கிறது. நாமும் அதில் வென்று காட்டுவோம். நீங்கள் துணை இருக்கும் போது நான் எதற்கும் அஞ்சப் போவதில்லை.
நாம் நியாயமாகவும் ஜனநாயகத்தோடும் நம்பிக்கை வைத்துள்ளதால் கொஞ்சம் அமைதி காக்கிறோம். ஓரளவுக்குத்தான் பொறுமை காக்க முடியும். அதற்கு மேல் நான் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வோம் என்றார் வி.கே.சசிகலா.
ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை: முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூர் தனியார் விடுதிக்குச் சென்ற சசிகலா, சட்டப் பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அவருடன் அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், மூத்த அமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, தங்கமணி உள்ளிட்டோர் சென்றனர்.
கூவத்தூரில் சட்டப்பேரவை உறுப்பினர்களை தனித்தனியாக சந்தித்து அவர் கருத்துகேட்டார். எம்.எல்.ஏ.க்களுடன் அவர் பேசுகையில், அதிமுகவை பிளவுபடுத்த சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்தநேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆளுநரின் முடிவுக்காக காத்திருப்போம்.
மேலும் தாமதம் செய்தால் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்து அதிரடி முடிவுகளை எடுப்போம் என கூட்டத்தினரிடையே அவர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயகத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்

தமிழக நலன், அரசியல் சாசன இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து, அவர் சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
""என்னை சட்டப் பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தங்களைச் சந்திக்க அனுமதி கேட்டு கடந்த பிப்.5, பிப்.7-ஆம் தேதிகளில் தீர்மான நகலுடன் கடிதம் வழங்கினேன். இதனைத் தொடர்ந்து, கடந்த 9-ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் தாங்கள் கேட்டுக் கொண்டபடி மூத்த அமைச்சர்களுடன் சென்று சந்தித்து, அறுதிப் பெரும்பான்மை இருப்பதால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
ஒரு வாரம் ஆகிவிட்டது: முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்ததோடு, அவரது ராஜிநாமா கடிதத்தை தாங்கள் ஏற்று 7 நாள்கள் ஆகிவிட்டன. இப்போதைய நிலைமையின் அவசரத்தை கருத்தில்கொண்டு, எனக்கு ஆதரவளிக்கும் அனைத்து சட்டப் பேரவை உறுப்பினர்களுடன் உடனடியாக தங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தர வேண்டும். தமிழக நலன், அரசியல் சாசன இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தைக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன்'' என அந்த கடிதத்தில் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

கட்சியில் பிளவு ஏற்படுத்த முயற்சி: ஆளுநர் மீது சசிகலா புகார்

அதிமுகவில் பிளவுகள் ஏற்படுத்த முயற்சிப்பதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீது அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா குற்றஞ்சாட்டினார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்த பிறகு, போயஸ் தோட்ட இல்லத்தில் அவர் சனிக்கிழமை இரவு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் கூறியது:-
ஆட்சி அமைக்க உரிமை கோரியும், ஆளுநர் இதுவரை அழைக்கவில்லை. இதுவரை நாங்கள் பொறுமையாக இருந்தோம். நாளை வேறு விதத்தில் போராட உள்ளோம். ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதற்காக நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது, எங்களது கட்சியில் (அதிமுக) பிளவுகள் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்படுகிறதோ என்று தோன்றுகிறது.
எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சந்தித்துப் பேசினேன். அவர்கள் திடமான மனநிலையுடன்தான் இருக்கின்றனர். அதிமுக குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த மனதிருப்திதான் எனக்கு ஏற்பட்டது என்றார்.
சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஏதும் எடுப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ""கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்களேன்'' என்றார் சசிகலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com