சசிகலாவுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு: ஓ.பி.எஸ். அணியில் எம்.பி.க்கள்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் இதுவரை ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
சசிகலாவுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு: ஓ.பி.எஸ். அணியில் எம்.பி.க்கள்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் இதுவரை ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா மீது புகார்களைத் தெரிவித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன் தனது ஆதரவை முதலில் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் ஆறுக்குட்டி, மனோரஞ்சிதம், மாணிக்கம் உள்ளிட்ட 5 பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
பரபரப்பு கூட்டியது..: இந்த நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் நாமக்கல் எம்.பி. சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி. அசோக்குமார் ஆகியோர் சனிக்கிழமை காலையில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன், அதிமுக மூத்த நிர்வாகி சி.பொன்னையன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்த முதலாவது அமைச்சர் பாண்டியராஜன் ஆவார்.
இதைத் தொடர்ந்து, திருப்பூர் எம்.பி. சத்தியபாமாவும் ஆதரவு தெரிவித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன் தொடக்கம் முதலே ஆதரவைத் தெரிவித்து வருகிறார்.
8 எம்.பி.க்கள்: இந்த நிலையில், மேலும் 4 எம்.பி.க்கள் முதல்வருக்கு ஆதரவு தெரிவிப்பர் என்றும் 8 பேர் ஓ.பி.எஸ். அணிக்கு ஆதரவு மனநிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சசிகலாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: இருப்பினும், வி.கே.சசிகலாவுக்கு வெள்ளிக்கிழமை வரையில் 129 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தது. அமைச்சர் பாண்டியராஜன் ஓ.பி.எஸ். அணிக்குச் சென்றதால் அந்த எண்ணிக்கை 128-ஆகக் குறைந்தது.
இதையடுத்து, எம்எல்ஏக்கள் யாரும் அணி தாவாமல் இருக்கவே கூவத்தூரில் உள்ள விடுதிக்கு சென்று வி.கே.சசிகலா உரையாற்றினார்.
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்கும் மனநிலையில் இருந்தவர்கள்கூட அந்த எண்ணத்தில் இருந்து மாறியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

தம்பிதுரை மீது அதிருப்தியா?

மக்களவை துணைத் தலைவரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலருமான மு.தம்பிதுரை தில்லியில் எம்பிக்களை ஒருங்கிணைத்தவர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரிசையாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், தம்பிதுரை மீது கட்சித் தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆகியோருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகளை அளித்ததால் தம்பிதுரையும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், தம்பிதுரை இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com