தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பன்னீர்செல்வத்திற்கு எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள்

தமிழகத்தில் அதிமுக ஆட்சித் தொடர வாக்களித்த தமிழக மக்கள் மற்றும் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு

சிதம்பரம்: தமிழகத்தில் அதிமுக ஆட்சித் தொடர வாக்களித்த தமிழக மக்கள் மற்றும் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தற்போதைய எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என புவனகிரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின் ராணுவமாக கட்சியாக கட்சியை கட்டுக்கோப்பில் வைத்திருந்தவர் ஜெயலலிதா. சாதாரண தொண்டனை உச்சத்தில் அமர வைத்து அழுகு பார்த்த தெய்வமாக விளங்கினார். கட்சியில் ஒன்றரை கோடி உறுப்பினர்களை பெற்று சரித்திரித்தில் இடம் பெற்றார். உலக தலைவர்களே அவரை பாராட்டினர்.

சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி சிறை செல்லும் அளவிற்கு கொண்டு சென்றனர். இதனால் ஜெயலலிதா அவமானங்களை சந்தித்தார். அதன் பின் அவரை தன்னிடம் இருந்து விலக்கியதை தொண்டர்கள் கொண்டாடினர். ஆட்சியில், கட்சியில் எந்த பொறுப்பும் கேட்க மாட்டேன் என மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து ஜெயலலிதாவிற்கு விசுவாசம் உள்ள தங்கையாக இருப்பேன் என கபட வேஷமிட்டு தஞ்சம் புகுந்ததை யாராலும் மறக்க முடியாது.

கட்சி வளர்ச்சிக்கு ஒரு துரும்பை கூட சசிகலா அவரது உறவினர்கள் கிள்ளிப்போட்டது இல்லை. ஜெயலலிதா மறைவின் மர்மம் விலகாத நிலையில் அவர் மறைந்த 30-ம் நாளில் பொதுச்செயலாளராகவும், 60-ம் நாளில் முதல்வராக துடிப்பதும் அதற்கு தற்போதுள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சிலர் துணை போவது ஜெயலலிதாவை நம்பி வாக்களித்த கோடான கோடி தொண்டர்களை புதை குழியில் தள்ளுவதற்கு சமம்.

பிற கட்சித் தலைவர்கள் பாராட்டும் வகையில் நேர்மையான ஆட்சியை நடத்தி ஜெயலலிதாவிற்கு புகழ் சேர்க்கும் பன்னீர்செல்வத்தை, தன் அதிகார பலத்தால் மிரட்டி ராஜிநாமா பெற்ற சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என தமிழக மக்கள் துடிக்கின்றனர்.

ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்ற முதல்வரை பாராட்டுவதுடன், அவர் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்வதுடன், சசிகலாவை போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். முதல்வர் பன்னீர்செல்வத்துடன், தீபா இணைந்து கட்சி பணியாற்றி தொண்டர்களின் எண்ணத்தை ஏற்க  வேண்டும். கடலுார் மேற்கு மாவட்டத்தை பொறுத்தவரை கிளைச் செயலாளர்கள் முதல் பல்வேறு பொறுப்புகளில் உள்ள பலர் ஒன்று திரண்டு முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட ஆயத்தமாகி வருகின்றோம் என பி.எஸ்.அருள் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com