அடுத்த நான்கரை ஆண்டுகள் அதிமுக ஆட்சிதான்!

அடுத்த நான்கரை ஆண்டு காலமும் அதிமுக ஆட்சிதான் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த கூவத்தூரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா. உடன் அதிமுக எம்எல்ஏக்கள்.
சென்னையை அடுத்த கூவத்தூரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா. உடன் அதிமுக எம்எல்ஏக்கள்.

அடுத்த நான்கரை ஆண்டு காலமும் அதிமுக ஆட்சிதான் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக எம்.எல்.ஏ.,க்களைச் சந்திப்பதற்கு முன்பாக, போயஸ் தோட்ட இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர்., மறைவின்போது இதே மாதிரி பிரச்னைதான் ஏற்பட்டது. அதிமுக பெரிய கட்சியாக உருவெடுப்பதை விரும்பாத சிலர் அப்போது அக்கட்சியில் பிளவை ஏற்படுத்த முயற்சித்தனர். அப்போது அதிலிருந்து கட்சியை மீட்ட ஜெயலலிதா, மாபெரும் இயக்கமாகக் கொண்டு வந்து ஆட்சியிலும் அமர வைத்தார். தொடர்ந்து, இரண்டு முறை ஆட்சியை நடத்தக் கூடிய ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளார்.
ஜெயலலிதா, இந்தக் கட்சியையும் ஆட்சியையும் நடத்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் உடனிருந்து பார்த்து இருக்கிறேன். அதனால், எங்களுக்கு இந்த சலசலப்பு புதிது அல்ல.
இன்று நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது, இந்தச் சூழ்ச்சியின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்று பத்திரிகையாளர்களான உங்களுக்குத் தெரியும்.
கடிதம் என்னுடையதல்ல...: நான் உயிரை விட்டு விடுவேன் என்று ஆளுநருக்கு கடிதம் எழுதியதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதை எனது நண்பர் எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதை நீங்களும் பார்க்கலாம்.
அரசியலில் பெண் இருப்பது கடினமானது: ஒரு பெண் அரசியலில் இருப்பது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம். அதை ஜெயலலிதா காலத்திலேயே பார்த்து இருக்கிறேன். அதிலிருந்து அவர் மீண்டு வந்தார். என்னைப் பொறுத்தவரை, நான் அதிமுகவுக்கு பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இந்தச் சோதனைகள் எங்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று. இதிலிருந்து மீண்டும் வெற்றி பெறுவேன்.
எனக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் என்பக்கம்தான் இருக்கிறார்கள்.
ஆளுநர் காலதாமதம் செய்வதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு நன்றாகத் தெரியும். மற்றவர்களும் அதை போகப் போக புரிந்துகொள்வார்கள்.
ஆளுநர் திங்கள்கிழமைக்குள் முடிவெடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம் என கருத்து கூறியுள்ளாரே என்று கேட்கிறீர்கள். அது குறித்தும் ஆலோசிப்போம்.
ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் என்றார் வி.கே.சசிகலா.

தொண்டர்கள் நமது பக்கம்

அதிமுகவுக்கு மிரட்டல், உருட்டல்கள் பெரிதல்ல. எதிர்நீச்சல் போட்டே இந்தக் கட்சியை வளர்த்து வந்துள்ளோம். தொண்டர்கள் நம் பக்கம்தான். எனவே மீண்டு வருவோம் என்று போயஸ் தோட்டத்தில் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்களிடையே பேசும்போது வி.கே.சசிகலா கூறினார்.
எம்.ஜி.ஆர்., மறைந்த போது ஒரு பெண் எப்படி அரசியலுக்கு வரலாம் என்று ஜெயலலிதாவை தடுக்க முற்பட்டனர். இப்போதும் அதே தோரணையுடன் செயல்படுகின்றனர்.
அன்றைக்கு எந்தக் கூட்டம் எதிர்த்ததோ அதே கூட்டம் தான் இன்றைக்கும் எதிர்க்கிறது. எதிர்நீச்சல் போட்டே கட்சியை வளர்த்தோம். எனவே உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம்.
அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவு கட்சிக்கு உள்ளது. அவர்கள்தான் இந்த இயக்கத்துக்கு சொந்தக்காரர்கள். எல்லை மீறிப்போனால் கட்சித் தொண்டர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்றார் வி.கே.சசிகலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com