ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் 6 எம்.பி.க்கள் ஆதரவு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் 6 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூத்துக்குடி ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, வேலூர் செங்குட்டுவன், பெரம்பலூர் மருதராஜ் ஆகியோர்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூத்துக்குடி ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, வேலூர் செங்குட்டுவன், பெரம்பலூர் மருதராஜ் ஆகியோர்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் 6 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து இவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்து அவரை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே சட்டப்பேரவை உறுப்பினர்கள் 7 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் புதிய அரசை அமைப்பதில் அதிமுகவின் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கும், பொறுப்பு முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
சில தினங்களுக்கு முன்பு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துகளுடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் வி.கே.சசிகலா.
ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரைச் சந்தித்து, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவையில் பெரும்பன்பான்மையை நிரூபிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஆனால், ஆளுநர் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வரவில்லை.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
11 எம்.பி.க்கள் ஆதரவு: நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 50- (மக்களவையில் 37 மற்றும் மாநிலங்களவையில் 13) ஆகும். இதன் காரணமாகவே நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுக விளங்கி வருகிறது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் ஆரம்பத்தில் இருந்தே ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து வருகிறார். அசோக்குமார் (கிருஷ்ணகிரி), சுந்தரம் (நாமக்கல்), சத்தியபாமா (திருப்பூர்), வனரோஜா (திருவண்ணாமலை) 4 மக்களவை உறுப்பினர்கள் சனிக்கிழமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அந்த அணியில் இணைந்தனர்.
இந்த நிலையில், செங்குட்டுவன் (வேலூர்) ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (தூத்துக்குடி) மருதைராஜா (பெரம்பலூர்) ராஜேந்திரன் (விழுப்புரம்), பார்த்திபன் (தேனி) ஆகிய 5 மக்களவை உறுப்பினர்களுடன் மாநிலங்களவை உறுப்பினர் லட்சுமணனும் ஞாயிற்றுக்கிழமை ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து அவரது அணியில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், லட்சுமணன் கூறியது:
பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் முடிவைத் தனியாக எடுக்கவில்லை. தொண்டர்கள், பொதுமக்கள் என எல்லோரின் கருத்தையும் அறிந்துதான் இந்த முடிவை எடுத்துள்ளோம். மனசாட்சி உள்ளவர்கள் எடுக்கும் முடிவு இதுவாகத்தான் இருக்கும். மக்களின் அன்பை வென்றெடுத்த ஒருவர்தான் முதல்வராக இருக்க முடியும்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வரிசையில் மக்களின் அன்பை வென்றவராக பன்னீர்செல்வமே உள்ளார். அந்த அடிப்படையில் அவரை ஆதரிக்கிறோம். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரை ஆதரிப்பர் என்றார்.
7 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: தற்போது 11 எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு பன்னீர்செல்வத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுதான் தேவை. இதுவரை பாண்டியராஜன், எஸ்.பி.சண்முகநாதன், மாணிக்கம், மனோரஞ்சிதம், மனோகரன், ஆறுகுட்டி என 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தையும் சேர்த்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.
சட்டப்பேரவையின் அதிமுகவின் பலம் 134-ஆக உள்ளது. இதில் ஆட்சியமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.
நடிகர்கள் ஆதரவு: நடிகர்கள் ராமராஜன், தியாகு, மனோபாலா, அருண்பாண்டியன் உள்பட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் பன்னீர்செல்வத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஆதரவு தெரிவித்தனர்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தூத்துக்குடி ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, வேலூர் செங்குட்டுவன், பெரம்பலூர் மருதராஜ் ஆகியோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com