சட்டப் பேரவையில் நிலைப்பாடு: திமுக இன்று ஆலோசனை

தமிழக சட்டப் பேரவையில் வாக்கெடுப்பு நடைபெறும்போது மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு திங்கள்கிழமை நடைபெறுகிறது.
சட்டப் பேரவையில் நிலைப்பாடு: திமுக இன்று ஆலோசனை

தமிழக சட்டப் பேரவையில் வாக்கெடுப்பு நடைபெறும்போது மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு திங்கள்கிழமை நடைபெறுகிறது.
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற உள்ள முதல் உயர்நிலைக் குழு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டம் ஏன்? ஆட்சிப் பொறுப்புக்கு வருவது தொடர்பாக, அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடையே நடக்கும் போட்டியில் திமுக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
பன்னீர்செல்வத்துக்கு ஆதரவா? சட்டப் பேரவையில் வாக்கெடுப்பு நடைபெறும்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை திமுக அளிக்கும் என்று கட்சியின் துணைப் பொதுச்செயலர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் அண்மையில் கூறியிருந்தார். இதையடுத்து, விவகாரம் தொடர்பாக யாரும் கருத்து கூறக் கூடாது என்றும் ஸ்டாலின் கூறினார்.
முதல்வர் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரு அணியாகப் பிரிந்தது. அப்போது, ஜானகி அணிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கேட்ட ஆதரவை திமுக தலைவர் கருணாநிதி ஏற்கவில்லை. அப்போது, ஜானகி அணியை திமுக ஆதரித்திருந்தால் ஜெயலலிதாவுக்கு அரசியல் எதிர்காலமே அமைந்திருக்காது என்று ஒரு கருத்து திமுகவில் உள்ளது.
இதனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து சசிகலாவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்துவிட்டால் திமுகவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றும் திமுகவினர் சிலர் கூறுகின்றனர். இதற்கு மாறாக, திமுக ஆட்சியமைக்க வேண்டும் என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.
திமுக ஆட்சி அமைக்க முயற்சியா? திமுகவின் 89 எம்எல்ஏக்கள், காங்கிரஸின் 8 எம்எல்ஏக்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஒரு எம்எல்ஏ என திமுக கூட்டணியில் 98 பேர் உள்ளனர். ஆட்சிக்கு அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஓ.பன்னீர்செல்வம் அணியின் மூலம் 20 எம்எல்ஏக்கள் கிடைத்தால், அதை ஏற்கலாமா வேண்டாமா என்பது தொடர்பாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com