சோழவரத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா?

சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பொன்னேரியை அடுத்த சோழவரம் பகுதியில் புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பொன்னேரியை அடுத்த சோழவரம் பகுதியில் புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது சோழவரம். இங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து வெளியூர், மாநகரப் பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
நாள்தோறும் வெளி மாவட்டங்கள், புறநகர்ப் பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், ஊத்துக்கோட்டை, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து தினமும் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை, விழாக் காலங்களில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இதுபோன்ற பண்டிகை நாள்களில் பொன்னேரி, திருவள்ளூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள், அங்கு ஏற்படும் வாகன நெரிசல் காரணமாக பேருந்து நிலையத்தின் உள்ளே செல்ல முடியாமல் நீண்ட தூரத்துக்கு முன்பாகவே பயணிகளை இறக்கி விட்டு திரும்பிவரும் நிலை இருந்தது.
இதனால், பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாமல் தங்களது முன்பதிவு பேருந்துகளை தவறவிடும் சூழ்நிலை இருந்தது. இந்நிலையில், கடந்த தீபாவளி பண்டிகை முதல், பயணிகளின் நலன் கருதி, விழாக் காலங்களில் சென்னை அண்ணாநகர், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாநகர், வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் தாற்காலிகமாக இயக்கப்படுகின்றன. இதனால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய பகுதியில் பண்டிகை காலத்தின்போது, போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வண்டலூர் பகுதியில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. அதேபோல், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், சென்னை மாநகரத்தின் நுழைவு வாயிலாக திகழும் சோழவரம் பகுதியில், புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், திருப்பதி, காளஹஸ்தி, புத்தூர், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் சோழவரம் வரை மட்டும் வந்து செல்லும். இங்கிருந்து பயணிகள் சென்னையில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு மாநகரப் பேருந்துகளின் மூலம் செல்ல முடியும்.
இந்த நடைமுறை பின்பற்றப்பட்டால், புழல், செங்குன்றம், காவாங்கரை, பாடி, கொளத்தூர், திருமங்கலம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். மேலும், வெளியூர் பேருந்துகள் நகருக்குள் வருவது தவிர்க்கப்படுவதால், வாகனப் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com