நிதிநிலை அறிக்கை சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி. உடன் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் உள்ளிட்டோர்.
நிதிநிலை அறிக்கை சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி. உடன் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் உள்ளிட்டோர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை ரியல் எஸ்டேட் விலையை குறைத்திருக்கிறது

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தின் விலை உயர்வை குறைத்திருக்கிறது என துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார்.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தின் விலை உயர்வை குறைத்திருக்கிறது என துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார்.
மத்திய அரசின் 2017-18 நிதிநிலை அறிக்கை மீதான விவாதம், விஐடி பல்கலைக்கழகத்தின் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், நிதிநிலை அறிக்கையின் சாதக-பாதகங்கள், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்புகள் குறித்து விவாதத்தில் பங்கேற்றவர்கள் விவாதித்தனர்.
விஐடி வேந்தர் விசுவநாதன்: மத்திய நிதிநிலை அறிக்கையில் (2017-18) பல்வேறு நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ. 19.78 லட்சம் கோடிதான். ஆனால், இந்த ஆண்டு ரூ. 31.46 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இதில், விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாட்டில் விவசாயத் துறை மேம்பாடு மிக அவசியம்.
அதுபோல, கிராமப்புற மேம்பாட்டுக்கும் இந்த நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ. 48 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இவை அனைத்தும் நடைமுறைப்படுத்துவது அவசியம். இதை அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணித்து, நடைமுறைப்படுத்துவது அவசியம்.
அடுத்தது, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருகிற ஏப்ரல் முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கும் 165 நாடுகள் பட்டியலில் 166 ஆவது நாடாக இந்தியா சேர உள்ளது.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலாளர் வெங்கடாசலம்: மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நடுத்தர, கிராமப்புற ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கையால், எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது?, மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? என்பது குறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை என்றார்.
பொருளாதார பேராசிரியர் வெங்கடாசலம்: மத்திய பொது நிதிநிலை அறிக்கையுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டதால், ரயில்வே துறைக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரத்துக்கான ஒதுக்கீட்டில் கடந்த நிதிநிலை அறிக்கைகளுடன் ஒப்பிடும்போது, இம்முறை குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. விவசாயம், கிராமப்புற மேம்பாடு போன்ற ஒருசில துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ள போதும், பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
அதுபோல, இந்திய தொழில் வர்த்தக சபை சுந்தரராஜன் பேசும்போதும், பொது நிதிநிலை அறிக்கையும், ரயில்வே நிதிநிலை அறிக்கையும் ஒன்றிணைக்கப்பட்டது ஏன்? என்று புரியவில்லை.
இதனால் ரயில்வே துறைக்கான முக்கியத்துவம் குறைந்துள்ளது என்றார்.
திமுக எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன்: மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை, திடீரென அறிவித்து நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்து, கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, வங்கிகள் - ஏடிஎம் மையங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பின்னர்தான் பண மதிப்பிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்திருக்க வேண்டும் என்றார்.
இறுதியாக, அனைவரின் கருத்துக்களுக்கும் பதிலளிக்கும் வகையில், இந்த விவாதத்துக்கு நடுவராக இருந்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசியது: ரயில்வே துறைக்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்தான். அதற்காக, அந்தத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவையில்லை.
மத்திய அரசு பொது நிதிநிலை அறிக்கையுடன் இதை இணைத்திருப்பதன் மூலம், ரயில்வே துறை மேலும் மேம்படும் என்பதுதான் எனது கருத்து.
அடுத்ததாக, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டிருக்கிறது என கேள்வி எழுப்பப்படுகிறது.
ஆனால், இந்த நடவடிக்கையால் கருப்புப் பணப் புழக்கம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ரியல் எஸ்டேட், தங்கம் விலை வெகுவாகக் குறைந்திருக்கிறது.
சென்னை போட் கிளப் பகுதியில் ரூ. 14 கோடிக்கு விற்கப்பட்ட ஒரு கிரவுண்ட் நிலம், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரூ. 7 கோடியாகக் குறைந்திருக்கிறது. அதுபோல, தங்கம் விலை 20 சதவீதம் குறைந்திருக்கிறது. கணக்கில் காட்டாமல் நடைபெறும் பண பரிவர்த்தனை தடுக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.
எனவே, மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, தேவையற்ற விலை உயர்வை தடுத்து நிறுத்தியிருக்கிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com