சமூகத்திற்கு பயன்தராத எழுத்துகளை எந்தச் சூழலிலும் பயன்படுத்தக் கூடாது: கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்

சமூகத்திற்கு பயன்தராத, பண்படாத எழுத்துக்களை எந்தச் சூழலிலும் பயன்படுத்தக் கூடாது என்றார் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்.கரூர் ஆசான் கலை,
நிகழ்ச்சியில் பேசுகிறார் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்.
நிகழ்ச்சியில் பேசுகிறார் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்.

சமூகத்திற்கு பயன்தராத, பண்படாத எழுத்துக்களை எந்தச் சூழலிலும் பயன்படுத்தக் கூடாது என்றார் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்.
கரூர் ஆசான் கலை, அறிவியல் கல்லூரியின் சார்பில் மாணவர்களால் தொடங்கப்பட்டுள்ள "விரல்நுனி' கையெழுத்து பத்திரிகையின் முதல் பிரதியை திங்கள்கிழமை வெளியிட்டு மேலும் அவர் பேசியது:
எழுத்து என்பது தன்னைத்தானே உணர்த்தும் ஒரு கருவி. எழுத்துக்களில் அன்பு இருக்க வேண்டும். எந்தச் சூழலிலும் சமூகத்திற்கு பயன்தராத பண்படாத எழுத்துக்களை பயன்படுத்தக் கூடாது. மாணவர்களின் கையெழுத்து பிரதிக்கு விரல் நுனி என்ற தலைப்பு மிகவும் பொருத்தமாக உள்ளது. நமது கைவிரல்களால் ஒருவரை அன்போடு அழைப்பதற்கும், கோபத்தோடு அழைப்பதற்கும் வேறுபாடு உள்ளது.
எனவே, உள்ளத்தில் இருந்து வரும் கருத்துக்கள் விரல் நுனியில் வரும்போது நல்லவையாக இருக்க வேண்டும்.
விடாமுயற்சியும், தளராத உழைப்பும் எதிர்பாராத நேரத்தில் வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும். உழைப்பும், முயற்சியும் எந்த ஒரு பெரிய வெற்றியையும் தேடித்தர வல்லது. என்னிடம் ஒரு பத்திரிகையாளர் பேட்டி கண்டபோது, நீங்கள் எத்தனை படைப்பாளிகளை உருவாக்கினீர்கள் என்றார். என்னிடம் படித்த ஒரு மாணவரும் எழுத்தாளர் ஆகவில்லை என்றேன் நான்.
ஆனால், என்னிடம் கல்லூரியில் படித்த மயில்சாமி அண்ணாத்துரை விஞ்ஞானியாகவும், சி. சுப்ரமணியம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் உலகளவில் புகழ்பெற்றுள்ளனர் என்றேன். என்னை பொருத்தவரை சிறந்த பண்புபெற்ற மாணவர்களை உருவாக்குவதே பெருமை என கருதுகிறேன் என்றார் அவர்.
முன்னதாக, கல்லூரியின் துணை முதல்வர் த. சரவணபிரகாஷ் வரவேற்றார். கல்லூரித் தலைவரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான முனைவர் சி. சுப்ரமணியம் தலைமை வகித்துப் பேசினார். கல்லூரித் தாளாளர் இரா. ஜெகநாதன் கருத்துரையாற்றினார்.
கையெழுத்து பத்திரிகையை கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் வெளியிட, ஆறுமுகம் அகாதெமி நிர்வாகச் செயலர் புலவர் நாகு. ஆறுமுகம் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் முனைவர் கோ.பி. ராஜேஷ் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தமிழ்த் துறை தலைவர் முனைவர் சு. மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com