அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுக இருக்கக் கூடாது: சசிகலா ஆவேசம்

அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுக இருக்கக் கூடாது என்று அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா கூறினார்.
அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுக இருக்கக் கூடாது: சசிகலா ஆவேசம்

சென்னை: அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுக இருக்கக் கூடாது என்று அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா கூறினார்.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்த்ததாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு அளித்தனர்.
இதையடுத்து கூவத்தூர் நட்சத்திர விடுதியில் அதிமுக பேரவை உறுப்பினர்களுடன் தங்கியிருந்த வி.கே.சசிகலா நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புறப்படுவதற்கு முன்பு அதிமுக தொண்டர்களிடம் அவர் பேசியதாவது:
""நீங்கள் (அதிமுக தொண்டர்கள்) யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். அதிமுக தொண்டர்கள் தைரியமாகச் செயல்பட வேண்டும். ஒருவர் 10 பேரின் பணியைச் செய்ய வேண்டும்.
என்னைத் தான் கூண்டுக்குள் அடைக்க முடியும். என் மனசை அடைக்க முடியாது. நான் எங்கிருந்தாலும் அதிமுகவையும் உங்களையும் (தொண்டர்களை) நினைத்துக் கொண்டே இருப்பேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை பிரமாண்டமாக அமைப்பது, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராமாவரம் தோட்டத்தில் வளைவு அமைப்பது ஆகிய பணிகளை அதிமுகவினர் செய்ய வேண்டும்.
எனக்கு வந்துள்ள பிரச்னை தற்காலிகமானதுதான். அதை சமாளிக்க என்னால் முடியும். சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு நமக்கு உள்ளது. அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.
எத்தனையோ வற்புறுத்தல்கள், அழுத்தங்கள் வந்தாலும் என்னை நீங்கள் (தொண்டர்கள்) ஆதரிக்கிறீர்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதும் எங்கள் மீதும் (சசிகலா, இளவரசி, சுதாகரன்) இந்த வழக்கை சுமத்தி இப்போது தண்டனை பெற்றுத் தந்ததே திமுகதான். திமுகதான் இந்த வழக்குக்கு காரணம்.
இந்த வழக்கு தாக்கல் செய்த பிறகு பல முறை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மக்கள் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக பேரவை உறுப்பினர்களின் ஆதரவு நமக்கு உள்ளது. கூடிய விரைவில் ஆட்சி அமைப்போம். சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை வைப்போம். அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுக என்ற ஒரு கட்சி இருக்கக் கூடாது என்றார் சசிகலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com