சரக்கு ரயில் ஓட்டுநர் திடீர் போராட்டம்: ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

கொச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த சரக்கு ரயில் ஓட்டுநர், நான்குனேரியில் ரயிலை நிறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த சரக்கு ரயில் ஓட்டுநர், நான்குனேரியில் ரயிலை நிறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொச்சியில் இருந்து திருவனந்தபுரம் வழியாக திருநெல்வேலிக்கு பெட்ரோலிய பொருள்களுடன் சரக்கு ரயில் இயக்கப்பட்டது. ரயிலை கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஓட்டி வந்தாராம். இந்த ரயிலை இயக்க வேண்டிய ஓட்டுநர் விடுப்பில் சென்றதால், கூடுதல் பணியாக ஓட்டுநர் சரக்கு ரயிலை இயக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணிக்கு நான்குனேரி நிலையத்திற்கு வந்தடைந்ததும் சரக்கு ரயிலை நிறுத்திய ஓட்டுநர், ரயிலை தொடர்ந்து இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டாராம். இதனால், சிக்னல் கிடைக்காத நிலையில் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற அனந்தபுரி விரைவு ரயில் நான்குனேரி அருகே நிறுத்தப்பட்டது. இதேபோல், நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இயக்கப்பட்ட பயணிகள் ரயிலும் நான்குனேரி அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநரிடம் ரயில்வே அதிகாரிகள் பேச்சு நடத்தினர். திருநெல்வேலியில் இருந்து மாற்று ஓட்டுநர் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அவர் போராட்டத்தை கைவிட்டார். பின்னர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் புறப்பட்டுச் சென்றன. ரயில் ஓட்டுநரின் இந்தப் போராட்டத்தால் திருநெல்வேலி-நாகர்கோவில் மார்க்கத்தில் ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com