தமிழகத்தில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதை பாஜக நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதை பாஜக நிறுத்த வேண்டும். யாருக்குப் பெரும்பான்மை பலம் உள்ளது என்பதை அறிவதற்காக சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டத்தொடரை ஆளுநர்

தமிழகத்தில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதை பாஜக நிறுத்த வேண்டும். யாருக்குப் பெரும்பான்மை பலம் உள்ளது என்பதை அறிவதற்காக சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டத்தொடரை ஆளுநர் உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற்புக்குரியது. சட்டத்தின் ஆட்சியும், அரசியல்சாசனமும் நிலைநாட்டப்பட வேண்டும்.
தமிழகத்தில் அரசியல் களம் குழப்பமாக உள்ளது. அங்கு குழம்பிய குட்டையில் மீன் பிடித்து ஆதாயம் தேடுவதை பாஜக நிறுத்த வேண்டும். அங்கு நடைபெற்று வந்துள்ள அரசியல் நிகழ்வுகள் முழுவதிலும் ஆளுநரின் செயல்பாடு மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து வந்துள்ளது.
தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை ஆளுநர் உடனடியாகக் கூட்ட வேண்டும். ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு தரப்போ, மற்றொரு தரப்போ தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறுவதை நிரூபிப்பதற்காக ஆளுநர் இதைச் செய்ய வேண்டும். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பைக் கருத்தில்கொண்டு ஆளுநர் மேற்கண்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். அரசு அமைப்பதில் மிக விரைவில் தெளிவு பிறப்பது அவசியம்.
பாஜகவும், மோடியும் ஜனநாயகத்தின் வழியில் குறுக்கே நிற்காமல், பெரும்பான்மை வெல்வதை அனுமதிக்க வேண்டும். கொள்கை ரீதியிலான கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் தீர்ப்பு யாருக்கு இருக்கிறதோ அவர்கள் ஆட்சி புரிய அனுமதிக்கப்பட வேண்டும்.
சிறப்பு பேரவைக் கூட்டத்தைக் கூட்டுவதில் இருந்து ஆளுநர் நழுவிச் செல்வது ஏன்?
தமிழகத்தில் ஒரு நிலையான அரசு அமைவதே மிக முக்கியமானதாகும் என்றார் சுர்ஜேவாலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com