நீதி வென்றுள்ளது

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் நீதி வென்றுள்ளதாக மூத்த வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா தெரிவித்தார்.
நீதி வென்றுள்ளது

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் நீதி வென்றுள்ளதாக மூத்த வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை தினமணி செய்தியாளரிடம் அவர் கூறியது:
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நீதியை நிலைநாட்டியுள்ளது.
நமது நாட்டில் எத்தனை பலம் வாய்ந்த, அதிகாரம் படைத்த அரசியல்வாதியாக இருந்தாலும், ஊழல் புரிந்தால் தண்டனை நிச்சயம் என்பதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பு ஊழலுக்கு எதிரான அழுத்தமான தீர்ப்பாகும். குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதும் உறுதியாகியுள்ளது. இந்தியாவின் நீதித் துறை வலிமையானதாகவும், சுதந்திரமாகவும், நடுநிலையுடன் இருக்கிறது என்பதை உலகுக்கு பறைசாற்றியுள்ளது.
இந்தத் தீர்ப்பு எனக்கு அதிசயமாக இல்லை. நான்கு பேருக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது. கணிதக் கோளாறு காரணமாக இந்தத் தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலைநிறுத்த முடியவில்லை.
ஒருவேளை கணக்கு சரியாக அமைந்திருந்தால், கர்நாடக உயர் நீதிமன்றத்திலேயே இந்தத் தீர்ப்பு கிடைத்திருக்கும்.
ஊழல் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் தண்டிக்கப்பட்டால், அவர் 6 ஆண்டுகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசு பதவி எதையும் வகிக்க இயலாது. தண்டனை காலத்துக்குப் பிறகுதான் இந்த 6 ஆண்டு காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அப்படியானால், இந்த வழக்கில் 4 ஆண்டு காலம் தண்டனை, 6 ஆண்டு காலம் பதவி வகிக்கத் தடை என மொத்தம் 10 ஆண்டுகளுக்கு அரசு பதவி எதையும் சசிகலாவால் அலங்கரிக்க இயலாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com