வரலாறு திரும்புமா?

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு கடந்த 1988-ஆம் ஆண்டில் அதிமுக இரண்டாக உடைந்தது. மீண்டும் இணைந்த கட்சி, இப்போது சசிகலா-ஓ.பி.எஸ். என இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்கிறது.
வரலாறு திரும்புமா?

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு கடந்த 1988-ஆம் ஆண்டில் அதிமுக இரண்டாக உடைந்தது. மீண்டும் இணைந்த கட்சி, இப்போது சசிகலா-ஓ.பி.எஸ். என இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்கிறது.
கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய கட்சியோ அல்லது அமைப்போ உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், யார் உண்மையான அதிமுக என்ற கேள்வி எழுப்பப்பட்டு அது தொடர்பான வழக்குகள் தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்படும் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். கடந்த 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24-இல் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அதிமுகவில் பெரும் சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார்.
ஆனால் அதை கட்சியின் மற்றொரு தலைவராக இருந்த ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்டப் பேரவை உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர்; மற்றவர்கள் ஜானகி அணியை ஆதரித்தனர். இப்போது போலவே, அன்று ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்கள் சொகுசுப் பேருந்துகளில் பெங்களூரு, மைசூரு, கோவா என்று கொண்டு செல்லப்பட்டனர்.
அப்போதைய சட்டப் பேரவையின் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியனும் ஜானகி அணியை ஆதரித்தார். மேலும், அவர் ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையிலிருந்து நீக்கினார். இந்தச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1986-இல் திமுகவின் பத்து உறுப்பினர்கள் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியலமைப்பு சட்ட நகலை எரித்தற்காக அவையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
எனவே சட்டப் பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 இல் இருந்து 191 ஆகக் குறைந்ததிருந்தது. ஜானகி தலைமையிலான அணியின் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 1988-ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்டது.
பி.எச்.பாண்டியன் செய்த சுவாரஸ்யம்: நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வை, அவைத் தலைவராக இருந்த பி.எச். பாண்டியன் செய்து கொண்டிருந்தார். அப்போது, பேரவை கூடியதும் அவர் திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்பட இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் தங்களது பதவியில் இருந்து விலகுவதாக தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இதனால், அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. இந்த கூச்சல்-குழப்பத்தைத் தொடர்ந்து, பேரவையை ஒத்திவைத்தார். ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். அதில் ஜானகி ராமச்சந்திரன் அணி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.


வாக்கெடுப்பின் போது அவையில் நடைபெற்ற குழப்பங்களை காரணம் காட்டி ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு ஜானகி அரசைக் கலைத்து தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தியது. அதிமுக இரண்டாக பிளவுபட்டது. தேர்தல் ஆணையம் இரு கட்சிகளையும் அதிகாரப்பூர்வமான அதிமுகவாக ஏற்க மறுத்து, அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது. அதிமுக (ஜா) அணிக்கு இரட்டைப் புறா சின்னமும், அதிமுக (ஜெ) அணிக்கு சேவல் சின்னமும் வழங்கப்பட்டது.
மீண்டும் வரலாறு திரும்புகிறது: கடந்த 1988-ஆம் ஆண்டில் அதிமுகவுக்கு 132 சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருந்தனர். இப்போது, 134 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஆனால், அப்போது ஜானகி, ஜெயலலிதா ஆகிய இரு அணிகளுக்கும் ஆட்சியை உடைக்கக் கூடிய அளவுக்கு கணிசமான எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.
ஆனால், இப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் வரையே ஆதரவு தெரிவித்துள்ளனர். சசிகலா தரப்பினர் தங்களுக்கு 125 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியுள்ளனர்.
இரு அணிகளாகப் பிரிந்துள்ள சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ள 10 எம்.எல்.ஏ.க்கள் சசிகலா அணியின் பக்கம் சாய்வார்களா அல்லது சசிகலா தரப்பிலுள்ள 125 எம்.எல்.ஏ.க்களில் எத்தனை பேர் ஓ.பி.எஸ். பக்கம் சாய்ந்து அவரது தலைமையை ஏற்பார்கள் என்பது சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரும் போதே தெரிய வரும். ஒருவேளை ஓ.பி.எஸ். அணியில் 18 எம்.எல்.ஏக்களுக்கும் அதிகமாகச் சேர்ந்துவிட்டால், யாராலும் ஆட்சி அமைக்க முடியாத நிலைமை ஏற்படலாம்.
நம்பிக்கை வாக்குக் கோரும் நிகழ்வில் ஏதேனும் ஒரு வெற்றி பெற்றாலும்கூட அதற்குப் பிறகும் அதிமுகவில் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ பிளவு எற்படுவதைத் தவிர்க்க முடியாது. அந்தப் பிளவு இரட்டை இலைச் சின்னத்தை முடக்கும் அளவுக்கு இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
* வாக்கெடுப்பின் போது அவையில் நடைபெற்ற குழப்பங்களை காரணம் காட்டி ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு ஜானகி அரசைக் கலைத்து தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தியது.
அதிமுக இரண்டாக பிளவுபட்டது. *

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com