வல்லத்தில் ஜல்லிக்கட்டு: 12 மாடுபிடி வீரர்கள் காயம்: சுகாதாரத் துறை துணை இயக்குநரும் காயமடைந்தார்

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 12 மாடுபிடி வீரர்கள், சுகாதாரத் துறை துணை இயக்குநர் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
வல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளையைப் பிடிக்க முயன்ற வீரர்கள்.
வல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளையைப் பிடிக்க முயன்ற வீரர்கள்.

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 12 மாடுபிடி வீரர்கள், சுகாதாரத் துறை துணை இயக்குநர் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
வல்லம் தெற்கு மேட்டுத் தெருவில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இதில், வல்லம் பழனியாண்டவர் கோயில் காளை முதலில் திறந்துவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 300-க்கும் அதிகமான காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளைப் பிடிப்பதில் ஏறத்தாழ 400 வீரர்கள் பங்கேற்றனர். இவர்கள் சுழற்சி முறையில் 100 பேர் வீதம் களத்தில் இறக்கப்பட்டனர்.
முன்னதாக, மாடுபிடி வீரர்களைச் சுகாதாரத் துறை மருத்துவக் குழுவினர் வயது, எடை, உயரம், ரத்த அழுத்தம், உடல்நலம் உள்ளிட்டவை குறித்து பரிசோதனை செய்தனர்.
இதில், உடல் தகுதியும், 18 வயதுக்கு மேல் 35 வயதுக்கு உள்பட்டவர்கள் மட்டுமே மாடுபிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.
வீரர்கள் கீழே விழுந்தால் காயம் ஏற்படாத வகையில், வாடிவாசலிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குத் தேங்காய் நார் போடப்பட்டது. எல்லைக்கோடு வரை மாட்டைப் பிடித்து சென்றவர்களுக்கு சைக்கிள், குத்துவிளக்கு, குடை, சில்வர் பாத்திரம் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் பிடிபடவில்லை என்றால் மாட்டின் உரிமையாளருக்கு அப்பரிசுகள் அளிக்கப்பட்டன.
சில மாடுகள் களத்தைக் கடந்த பிறகு, மீண்டும் வாடிவாசலை நோக்கி வந்ததால், அவ்வப்போது பரபரப்பு ஏற்பட்டது.
துணை இயக்குநர் காயம்: போட்டியில் காயமடைந்த 9 பேருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்பணியில் 7 மருத்துவர்கள் உள்பட 23 மருத்துவப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதனிடையே, மாடுபிடி வீரர்கள் யாரும் காயமடைந்தனரா என்பதைப் பார்ப்பதற்காக சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஏ. சுப்பிரமணி களத்துக்குள் சென்றார். களத்தைக் கடந்து சென்ற மாடு திரும்பி வாடிவாசலை நோக்கி வந்தபோது சுப்பிரமணியை முட்டியது. இதில், வலது கையில் பலத்தக் காயம் ஏற்பட்டதால், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், களத்துக்குக் கொண்டுவரப்பட்ட மாடு சென்னம்பட்டி சாலையில் ஓரமாக நின்ற கண்டிதம்பட்டு பி. சந்தானத்தையும் (75), களத்திலிருந்து வெளியே வந்த மாடு சாலையோரம் நின்ற வல்லத்தைச் சேர்ந்த ரமேஷையும் (32) முட்டின. இதில், இருவரும் காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இப்போட்டியையொட்டி, தெருவில் இருபுறமும் பொதுமக்களின் பாதுகாப்புக்காகத் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டன. மாடுகளைத் துன்புறுத்தாத வகையில், கோட்டாட்சியர் சி. சுரேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ. மகேஷ், விழாக் குழுவினர் ஆகியோர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர். ஏறத்தாழ 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கிணற்றில் விழுந்த காளை இறப்பு: இந்த நிகழ்ச்சியில் பல காளைகள் மிரண்டு ஓடின. களத்தை விட்டு வெளியேறிய காளைகளைப் பிடிக்க உரிமையாளர்கள் சிரமப்பட்டனர். இதனிடையே, அருகே காலி இடத்தில் உள்ள திறந்தவெளி கிணற்றில் 3 மாடுகளும், மற்றொரு கிணற்றில் ஒரு மாடும் விழுந்தன.
கிணற்றில் தண்ணீர் இல்லாததால் ஒரு மாடு அடிபட்டு இறந்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று 3 மாடுகளை உயிருடன் மீட்டனர். இறந்த மாடும் மீட்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com